செய்திகள்

கல்பாக்கம் அருகே காவலாளி கொலையில் 3 பேர் கைது

Published On 2017-03-27 13:25 IST   |   Update On 2017-03-27 13:25:00 IST
கல்பாக்கம் அருகே காவலாளி கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மாமல்லபுரம்:

கல்பாக்கத்தை அடுத்த ஆரம்பாக்கத்தில் உள்ள தனியார் வீட்டுமனை விற்பனை அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தவர் சுரேஷ் .வயது 48).

நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். அலுவலகத்தில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் பொருட்களை கொலையாளிகள் கொள்ளையடித்து சென்றிருந்தனர்.

இது குறித்து சதுரங்கப்பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கொலை நடந்த வீட்டுமனை பிரிவு அலுவலகத்துக்குள் 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்ததை அருகில் உள்ள மற்றொரு மனைப்பிரிவு காவலாளி பார்த்து உள்ளார்.

இதனை வைத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள பழைய குற்றவாளிகளிடம் விசாரித்து வருகிறார்கள்.

மேலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள டோல்கேட் பகுதியில் வைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கொலை தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. அவர்கள் திருப்போரூர், பையனூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது. இது தொடர்பாக பெண் உள்பட மேலும் 3 பேரிடமும் விசாரணை நடக்கிறது.

கொள்ளை முயற்சியை தடுத்ததால் அவர்கள் சுரேசை கொலை செய்ததாக தெரிவித்துள்ளனர்.

கல்பாக்கம் அருகே உள்ள வயலூரில் சில மாதங்களுக்கு முன் அணுமின் நிலைய ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டார்.

இதுவரை இந்த வழக்கில் கொலையாளி பிடிபடவில்லை. தொடர்ந்து அணு மின் நிலையம் அருகேயே கொலை கொள்ளை சம்பவங்கள் தொடர்வதால் கல்பாக்கம், அணுபுரம் பகுதியில் தங்கியிறுக்கும் அணுமின் நிலைய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

Similar News