செய்திகள்

பிணஅறை சாவி மாயமானதால் 7 மணி நேரம் வெளியே கிடந்த உடல்கள்

Published On 2017-03-27 13:15 IST   |   Update On 2017-03-27 13:15:00 IST
செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் பிணஅறை சாவி மாயமானதால் சுமார் 7 மணி நேரத்துக்கும் மேலாக உடல்கள் பிண அறை வாசலிலேயே வைக்கப்பட்டு இருந்தது.
செங்கல்பட்டு:

செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு கொண்டு வரப்படும் உடல்கள் அங்குள்ள பிண அறையில் வைக்கப்படுவது வழக்கம்.

விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் பிரேத பரிசோதனை நடைபெறாது. எனவே கொண்டு வரப்படும் உடல்கள் பிண அறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். அந்த அறை பூட்டப்பட்டு அதன் சாவி அவசர சிகிச்சை பிரிவில் வழக்கமான இடத்தில் ஊழியர்கள் வைத்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை (ஞாயிற்றுக்கிழமை) 3 மணி அளவில் சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த சிறுசேரியில் கிணற்றில் மூழ்கி பலியான வாலிபர் உடல், கூடுவாஞ்சேரியில் தற்கொலை செய்த பெண்ணின் உடல் மற்றும் செங்கல்பட்டை அடுத்த கரும்பாக்கத்தில் கிணற்றில் மூழ்கி பலியான மற்றொரு வாலிபர் உடல் என 3 உடல்கள் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது.இதையடுத்து பிணவறையின் கதவை திறக்க அவசர சிகிச்சை பிரிவில் இருந்த சாவியை எடுப்பதற்கு ஊழியர்கள் சென்றனர். ஆனால் வழக்கமாக வைக்கப்படும் இடத்தில் சாவி இல்லை. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து மாயமான சாவியை தேடும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். இதன் காரணமாக பிரேத பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்ட 3 உடல்களும் பிண அறை வாசலிலேயே வைக்கப்பட்டு இருந்தது. இதனை கண்டு உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சுமார் 7 மணி நேரம் நேரத்துக்கும் மேலாக உடல்கள் அங்கேயே இருந்தன. இரவு 10 மணி அளவில் மாயமான சாவி சிக்கியது. இதைத் தொடர்ந்து உடல்களை பிண அறையில் ஊழியர்கள் வைத்தனர்.

இச்சம்பவத்தால் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரி பரபரப்பாக காணப்பட்டது. பிண அறையின் சாவியை கடைசியாக வைத்த ஊழியர் யார்? என்று விசாரணை நடந்து வருகிறது.

Similar News