ரூ.3 கோடி பழைய 500, 1000 நோட்டு மாற்ற முயற்சி: டாக்டரை பிடிக்க போலீஸ் டெல்லி விரைந்தது
ஆலந்தூர்:
மணப்பாக்கத்தில் நேற்று போலீசார் ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ரூ.3 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் இருந்தது. காரில் இருந்த 3 பேரில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். 2 பேர் சிக்கினர்.
அவர்கள் பெசன்ட் நகரை சேர்ந்த கண்ணன், தி.நகரை சேர்ந்த கிருஷ்ண மோகன் என்பதும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிவதும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.3 கோடி பணம் பெசன்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டருக்கு சொந்தமானது ஆகும். ஐதராபாத்தை சேர்ந்த புரோக்கர் பிரசாத் என்பவர் சொன்ன தகவலின் அடிப்படையில் சென்னை மணப்பாக்கத்தை சேர்ந்த ஒருவரிடம் கமிஷன் கொடுத்து பணத்தை மாற்ற சென்றது விசாரணையில் தெரியவந்தது.
தற்போது அந்த டாக்டர் டெல்லியில் உள்ளார். பணம் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த போலீசார் டெல்லி சென்றுள்ளனர்.
கண்ணன், கிருஷ்ண மோகனிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. தப்பி ஓடியவர் புரோக்கர் பிரசாத் என்பது தெரியவந்துள்ளது. அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.