செய்திகள்

112 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக சசிகலா மீது புகார்: காஞ்சீபுரம் போலீசார் அதிரடி விசாரணை

Published On 2017-03-24 16:27 IST   |   Update On 2017-03-24 16:27:00 IST
சிறுதாவூரில் கங்கை அமரன் பங்களா உள்பட 112 ஏக்கர் நிலத்தை அபகரித்ததாக சசிகலா மீது அளிக்கப்பட்ட புதிய புகாரின் அடிப்படையில் காஞ்சீபுரம் போலீசார் அதிரடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
காஞ்சீபுரம்:

காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள சிறுதாவூர், பையனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் நிலங்கள் வாங்கியதில் மோசடி நடந்திருப்பதாக தற்போது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அறப்போர் இயக்கம் சார்பில் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் கடந்த மாதம் (பிப்ரவரி) 9-ந்தேதி அளிக்கப்பட்ட புகார் மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-

சிறுதாவூர் பகுதியில் சசிகலா குடும்பத்தினர் பல்வேறு நபர்களிடம் இருந்து வாங்கிய 112 ஏக்கர் நிலம் முறைகேடாக வாங்கப்பட்டுள்ளது. அங்கு நிலம் வைத்திருந்தவர்களை மிரட்டி பல்வேறு சர்வே எண்களில் பத்திர பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் அரசு புறம்போக்கு நிலங்களும், குளம் குட்டைகளும் அடங்கியுள்ளன. ஓய்வு பெற்ற ராணுவ வீரரான கண்ணன் என்பவரிடமிருந்தும் அவருக்கு சொந்தமான நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக அபகரித்துள்ளனர்.

சினிமா இயக்குனர் கங்கை அமரன் மற்றும் அவரது மனைவி மணிமேகலை பெயரில் பையனூர் கிராமத்தில் இருந்த 22 ஏக்கர் நிலமும் அபகரிக்கப்பட்டுள்ளது.



இது தொடர்பாக கடந்த 2000-ம் ஆண்டு காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இதுபற்றி உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான ஜெயராமன் வெங்கடேசன் என்பவரே இந்த புகார் மனுவை அளித்திருந்தார்.

சசிகலா மீதான புகார் பற்றி விசாரணை நடத்த காஞ்சீபுரம் மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனை தொடர்ந்து நில அபகரிப்பு பிரிவு போலீசார் இது தொடர்பாக விசாரணையை தொடங்கி உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான கண்ணன் மற்றும் அறப்போர் இயக்கத்தை சேர்ந்த ஜெயராமன் வெங்கடேசன் ஆகியோர் தாங்கள் அளித்த புகார் தொடர்பாக மேலும் தகவல்களை தெரிவிப்பதற்காக காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள அபகரிப்பு பிரிவுக்கு வந்திருந்தனர். அங்கு புகார்தாரரான கண்ணனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

சசிகலாவுக்கு எதிரான புகார் மனுவில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் போலீசார் விசாரணையை நடத்தி வருகிறார்கள். இந்த புகாரின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

கங்கை அமரனுக்கு சொந்தமான 22 ஏக்கர் நிலத்தில் அவர் கட்டியிருந்த பங்களாவும் இருந்தது. இதனோடு சேர்த்து தான் 112 ஏக்கர் நிலத்தை சசிகலா தரப்பினர் அபகரித்துள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பங்களாவை பறி கொடுத்தது பற்றி இயக்குனரும் இசை அமைப்பாளருமான கங்கை அமரனும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பரபரப்பாக குற்றம் சாட்டி இருந்தார்.

நான் எனது பங்களாவை இழப்பதற்கு சசிகலாவே காரணம் என்றும், அதனை விற்கமாட்டேன் என்று தொடர்ந்து கூறி வந்த நிலையிலும் என்னிடம் இருந்து மிரட்டி பங்களாவை பறித்துக் கொண்டனர் என்று கூறி இருந்தார்.

இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே சசிகலா மீதான நில அபகரிப்பு புகாரை போலீசாரை விசாரிக்க தொடங்கி இருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Similar News