செய்திகள்

துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக முன்னாள் எம்.எல்.ஏ. மீது வழக்கு

Published On 2017-02-11 09:24 IST   |   Update On 2017-02-11 09:24:00 IST
அரியலூரில் சசிகலா- தீபா ஆதரவாளர்கள் மோதலின் போது துப்பாக்கியை காட்டி மிரட்டியதாக முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அரியலூர்:

அரியலூர் பஸ் நிலையம் முன்பு கடந்த 8-ந்தேதி தீபா ஆதரவாளர்களுக்கும், சசிகலா அணியை சேர்ந்த அ.தி.மு.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் உருட்டு கட்டைகளால் ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு தரப்பை சேர்ந்தவர்களும் அரியலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

இதில் தீபா ஆதரவாளர் முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் கைத்துப்பாக்கியை காட்டி தங்களை மிரட்டியதாகவும், அவரது ஆதரவாளர்களான செந்தில், ராஜா, மோகன், கண்ணன், ராமமூர்த்தி, மாரிமுத்து ஆகியோர் விறகு கட்டையால் தாக்கியதாகவும் அரியலூர் போலீஸ் நிலையத்தில் சசிகலா அணியை சேர்ந்த அ.தி.மு.க.வினர் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன், அவரது ஆதரவாளர்கள் செந்தில், ராஜா உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தீபா அணி சார்பில் கொடுக்கப்பட்ட புகாரின்பேரில் பிரேம், செந்தில், புரட்சி சிவா, சுரேஷ், தமிழ்செல்வன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றி முன்னாள் எம்.எல்.ஏ. இளவழகன் கூறுகையில், “கடந்த 8-ந்தேதி ஜெ.தீபா பேரவை சார்பில் எனது தலைமையில் சிலர் ஊர்வலமாக சென்று அரியலூர் பஸ் நிலையம் முன்பு சசிகலா கொடும்பாவியை எரித்தோம். அப்போது அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இருந்து சசிகலாவின் அ.தி.மு.க. அணியை சேர்ந்த செந்தில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கையில் உருட்டு கட்டைகளுடன் வந்து எங்களை கண்மூடித்தனமாக தாக்கினர். எனது அணியினரை காப்பாற்றவும், பொதுமக்கள் மற்றும் அரசு சொத்துக்களுக்கு சேதம் ஏற்படாமல் இருக்கவும் அரசு அனுமதியுடன் நான் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்து காட்டியதும் தான் எதிரிகள் பின்வாங்கினர். இதனால் தான் நாங்கள் உயிர்பிழைத்தோம். இதனால் மிகப்பெரிய கலவரம் தடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது” என்று கூறினார். 

Similar News