செய்திகள்

புதுக்கோட்டை-காரைக்கால் மீனவர்கள் மோதல்: கடலோர காவல் படையினர் தீவிர விசாரணை

Published On 2017-02-05 20:39 IST   |   Update On 2017-02-05 20:39:00 IST
நடுக்கடலில் மீன்பிடித்தபோது புதுக்கோட்டை-காரைக்கால் மீனவர்கள் தகராறில் ஈடுபட்டனர். இது குறித்து கடலோர காவல் படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அறந்தாங்கி:

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து நேற்று 240-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 1000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இதில் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த சின்னத்தம்பி (40), பாலா (28), சின்னப்பா (38), கணேசன் (35), பொன்ராஜ் (23), மணி (35), மற்றொரு கணேசன் (50), பாக்கியம் (38), மாணிக்கம் (35), சாகுல்ஹமீது (25) ஆகிய 4 பேரும் சென்று நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த இரும்பு விசைப்படகில் வந்த மீனவர்கள் தடை செய்யப்பட்ட இரட்டைமடி வலையை பயன்படுத்தி மீன் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்களுக்கும், காரைக்கால் மாவட்ட மீனவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது.

அப்போது காரைக்கால் மீனவர்கள் தங்களுடைய இரும்பு விசைப்படகால், கோட்டைப் பட்டினம் மீனவர்களுடைய விசைப்படகின் மீது மோதி உள்ளனர். இதில் 3 விசைப் படகுகளும் சேத மடைந்தன.

இதையடுத்து கோட்டைப்பட்டினம் மீனவர்கள் சக மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்து உள்ளனர். இதையடுத்து சுமார் 100-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் அங்கு சென்று, காரைக்கால் மீனவர்களின் விசைப்படகையும், அவர்களையும் சிறைபிடித்து கோட்டைப்பட்டினம் மீன் பிடி துறைமுகத்திற்கு கொண்டு வந்தனர்.

மேலும் இது குறித்து கடலோர போலீஸ் குழுமத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மீன் வளத்துறையினர் மற்றும் கடலோர போலீஸ் குழுமத்தினர் காரைக்கால் விசைப் படகையும், அதில் இருந்த 9 மீனவர்களையும் மணமேல்குடி அழைத்து சென்று விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தால் கோட்டைப்பட்டினம் பகுதியில் இருந்து மீன்பிடிக்க சென்ற அனைத்து மீனவர்களும் மீன் பிடிக்காமல் கரை திரும்பினார்கள். இந்த சம்பவத்தால் மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்பட்டது.

அசம்பாவிதம் ஏதும் நடை பெறாமல் இருக்க கோட்டைப்பட்டினம் போலீஸ் துணை சூப்பிரண்டு காமராஜ் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கோட்டைப்பட்டினம் மீனவர்கள் இதற்கு தீர்வு காண கோரி இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு செய்துள்ளனர். இது குறித்து அறிந்த மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர போலீஸ் குழுமத்தினர் காரைக்கால் மற்றும் கோட்டைப்பட்டினம் மீனவர்களுக்கிடையே இன்று சமரச பேச்சுவார்த்தை நடத்த திட்ட மிட்டுள்ளனர்.

இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News