புதிய ஆரம்ப சுகாதார நிலையம் திறப்புவிழா: அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்
விராலிமலை:
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திருநல்லூர் கிராமத்தில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு மாவட்ட ஆட்சி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார்.
இவ்விழாவில் மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டு புதிய ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் வைரமுத்து பேராசிரியர் காதர் முஹைதீன், சட்டமன்ற உறுப்பினர் ஆறுமுகம், சுகாதார பணிகள் இணை இயக்குநர் சம்சாத் பேகம், துணை இயக்குநர் (சு.ப) கலைவாணி, கூட்டுறவு தலைவர் ராமசாமி,
ஆத்மா கமிட்டி தலைவர் சாம்பசிவம், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் இளவரசி வசந்தன், நாட்டாமை அலாவுதீன், திருநல்லூர் கோயில் நிர்வாகி செந்தில் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் என பலரும் விழாவில் கலந்துகொண்டனர். முன்னதாக பொது சுகாதார துறை சார்பில் ஹரி விக்னேஷ் வரவேற்றார். முடிவில் வட்டார மருத்துவ அலுவலர் கவி சக்கரவர்த்தி நன்றி கூறினார்.
பின்னர் முதலமைச்சரின் சிறப்பு மருத்துவ முகாம் நிலைய வளாகத்தில் நடைபெற்றது. முகாமிற்கு அணைத்து வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசு மருத்துவமனை சிறப்பு மருத்துவர்கள் பொது மக்களுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளித்தனர். முகாமில் சர்க்கரை நோய் , ரத்த அழுத்தம், கர்பிணி பெண்களுக்கான ஸ்கேன், குழந்தை நலம், கண் மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டது.
முகாமில் மொத்தம் 815 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 51 கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் பார்க்கப்பட்டது. 25 பேருக்கு இ.சி.ஜி. பரிசோதனை செய்யப்பட்டது மற்றும் 24 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர். முகாமில் பல நோய்கள் பற்றிய விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ குழு சார்பில் நிலவேம்பு கசாயம் மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது. டெங்கு விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் மருத்துவ முகாம் ஏற்பாடுகளை பரம்பூர் வட்டார சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.