செய்திகள்

அனைவரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும்: மருத்துவக்கல்லூரி முதல்வர் வேண்டுகோள்

Published On 2017-01-25 13:26 IST   |   Update On 2017-01-25 13:26:00 IST
அனைவரும் உடல் உறுப்புகளை தானம் செய்ய வேண்டும் என புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை:

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட பணியாளர்களுக்கு உடல் உறுப்பு தான கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவ கல்லூரி முதல்வர் பரிமளாதேவி தலைமை வகித்தார்.

மருத்துவ பணிகள் இணை இயக்குனர் சம்சத் பேகம் முன்னிலை வகித்தார். இந்த கருத்திரங்கில் முதல்வர் பரிமளா தேவி பேசியதாவது:-

உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. விபத்தில் யாராவது மூளைச்சாவு அடைந்தால் உறவினர்கள் ஒரு வினாடி கூட தாமதிக்காமல் உறுப்புகளை தானம் செய்ய முன்வர வேண்டும். மூளைச்சாவு அடைந்தவரிடம் எடுக்கப்படும் இதயம், இதயவால்வு, ரத்த குழாய், நுரையீரல், கணையம், சிறுகுடல், தோல், சிறுநீரகங்கள், கண்கள் உள்ளிட்ட உறுப்புகள் மூலம் 12 பேருக்கு வாழ்வளிக்க முடியும். எனவே உடல் உறுப்பு மாற்று சிகிச்சை ஆணையம் வழிகாட்டுதலின்படி மாவட்ட அரசு மருத்துவமனைகளில் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் உடல் உறுப்பு மற்றும் திட்டம் குறித்த சிகிச்சை முறைகள் மற்றும் தகவல்களை ஏழை எளிய மக்களுக்கு விளக்கி கூறி பலனடைய செய்வதோடு உறுப்பு தானம் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி உறுப்பு தானத்தில் தமிழகம் தொடர்ந்து முதலிடம் பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்றார்.

இதனை தொடர்ந்து நத்தம்பண்ணையை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு முதல் நபராக தன்னுடைய அனைத்து உடல் உறுப்புகளையும் தானம் செய்வதற்கான விருப்ப விண்ணப்பத்தை பூர்த்தி செய்து முதல்வர் பரிமளா தேவியிடம் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவமனைகளில் உடல் உறுப்பு தான கையேடுகளை பொதுமக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என காப்பீடு திட்ட அலுவலர்களுக்கு சாலை விபத்து தடுப்பு மற்றும் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் மோகன்ராஜ் கூறினார், புதுக்கோட்டை மாவட்ட காப்பீடு திட்ட மாவட்ட அலுவலர் சுவாமிநாதன் விருப்ப மனுவில் கோரப்பட்டுள்ள தகவல்களை விவரித்து கூறினார். முன்னதாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் காப்பீடு திட்ட தொடர்பு அலுவலர் பாலமீனா வரவேற்றார். முடிவில் காப்பீடு திட்ட ஒருங்கிணைப்பாளர் முபாராக் நன்றி கூறினார்.

Similar News