செய்திகள்
எம்.ஜி.ஆர். சிலைக்கு ஊர்வலமாக வந்த தீபா ஆதரவாளர்களை தடுக்க உருக்கட்டையுடன் வந்திருந்த அ.தி.மு.க.வினர்.

தீபா ஆதரவாளர்களை தடுத்து நிறுத்த உருட்டுக்கட்டையுடன் வந்த அ.தி.மு.க.வினர்

Published On 2017-01-18 16:19 IST   |   Update On 2017-01-18 16:19:00 IST
புதுக்கோட்டையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க வந்த தீபா ஆதரவாளர்களை தடுத்து நிறுத்த உருட்டுக்கட்டையுடன் வந்த அ.தி.மு.க.வினரால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
புதுக்கோட்டை:

எம்.ஜி.ஆரின் 100-வது ஆண்டு பிறந்தநாள் விழாவையொட்டி புதுக்கோட்டையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா ஆதரவாளர்கள் மன்னர் கல்லூரியில் இருந்து, பழைய பஸ் நிலையம் வரை ஊர்வலமாக சென்று எம்.ஜி. ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க போலீசாரிடம் அனுமதி பெற்று இருந்தனர்.

அதன்படி நேற்று முன்னாள் எம்.பி. ராஜாபரமசிவம் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தீபா ஆதரவாளர்கள் மன்னர் கல்லூரி முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக புறப்பட தயார் நிலையில் இருந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அ.தி.மு.க.வினர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு போடப்பட்டு உள்ள கதவில் பூட்டுப்போட்டு பூட்டினர். பின்னர் அவர்கள் சிலைக்கு மாலை அணிவிக்க வரும், தீபா ஆதரவாளர்களை தடுத்து நிறுத்துவதற்காக உருட்டு கட்டைகளுடன் காத்திருந்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பதற்றமும் உருவானது.

மேலும் புதிய பஸ்நிலையம் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த தீபா ஆதரவு பதாகைகளையும், அ.தி.மு.க.வினர் அகற்றினர்.

தொடர்ந்து பதற்றம் நிலவியதால் அந்த பகுதியில் கடைகள் அனைத்தும் உடனடியாக அடைக்கப்பட்டன. தகவல் அறிந்ததும் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அத்துடன் போக்குவரத்தும் தடை செய்யப்பட்டது.

சட்டம், ஒழுங்கு சீர்கெடும் நிலை ஏற்படுவதை தடுக்கும் வகையில் புதுக்கோட்டை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகுரு தலைமையிலான போலீசார் மன்னர் கல்லூரி முன்பு திரண்டு இருந்த தீபா ஆதரவாளர்களை சுற்றி வளைத்து தடுத்தனர். அப்போது போலீசார், சட்டம், ஒழுங்கை கருத்தில் கொண்டு தீபா ஆதரவாளர்களை எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவிக்க தடை விதிக்கிறோம் என கூறினார்கள்.

இதனால் ஆத்திரமடைந்த தீபா ஆதரவாளர்கள் மன்னர் கல்லூரி முன்பு உள்ள சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த மாவட்ட வருவாய் அதிகாரி ராமசாமி கார் உள்பட அனைத்து வாகனங்களும் போக்குவரத்து நெரிசலில் சிக்கின.

அதன்பிறகு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 11 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றி புதுக்கோட்டையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

Similar News