மேல்மருவத்தூர் அருகே அரசு பஸ்-லாரி மோதல்: 20 பயணிகள் படுகாயம்
மதுராந்தகம்:
திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு இன்று அதிகாலை அரசு பஸ் புறப்பட்டது. சுமார் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்தனர்.
அதிகாலை 6.30 மணி அளவில் மேல்மருவத்தூர் அருகே அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. அப்போது சாலையோரத்தில் பழுதாகி நின்ற லாரி மீது திடீரென அரசு பஸ் மோதியது.
இதில் பஸ்சின் முன்பகுதி, பலத்த சேதம் அடைந்தது. டிரைவர் உள்பட 20-க்கும் மேற்பட்ட பயணிகள் பலத்த காயம் அடைந்தனர்.
தகவல் அறிந்ததும் மேல் மருவத்தூர் போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களுக்கு செங்கல்பட்டு, மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
காயம் அடைந்தவர்கள் விபரம் உடனடியாக தெரிய வில்லை. அவர்கள் சென்னை, திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.
இந்த விபத்தால் சென்னை - திருச்சி நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை 9.30 மணிக்கு பிறகே போக்கு வரத்து சீரானது.
இது குறித்து மேல்மருவத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.