புதுக்கோட்டையில் விவசாய தொழிலாளர்கள் காத்திருக்கும் போராட்டம்
புதுக்கோட்டை:
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும். தற்கொலை மற்றும் அதிர்ச்சியால் மரணமடைந்த விவசாயிகளின் குடும்பத்துக்கு தலா ரு.10 லட்சம் வழங்க வேண்டும். வறட்சியால் கருகிப்போன நெல் பயிர் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம், கரும்புக்கு ரூ.50 ஆயிரம், மானாவாரி பயிர்களுக்கு ரூ.15 ஆயிரமும் இழப்பீடு வழங்க வேண்டும்.
பயிர்க்கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயத் தொழிலாளர்களுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தை 200 நாட்களாக விரிவுபடுத்தி ரூ.300 கூலி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.லாசர் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.பொன்னுச்சாமி, விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ராஜசேகரன் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
போராட்டம் நடத்திக்கொண்டிருந்த சங்கத்தலைவர்களை மாவட்ட ஆட்சியர் அழைத்துப் பேச்சுவார்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்திய சங்கத் தலைவர்களிடம் உங்கள் கோரிக்கைகளை முறைப்படி அரசுக்குத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார். அதற்கு நன்றி தெரிவித்த சங்க நிர்வாகிகள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை காத்திருக்கும் போராட்டம் தொடரும் எனத் தெரிவித்துவிட்டு வந்தனர்.