செய்திகள்

வைத்தீஸ்வரன் கோவிலில் ரெயிலில் கடத்திய ரேசன் அரிசி பறிமுதல்

Published On 2016-12-16 15:50 IST   |   Update On 2016-12-16 15:50:00 IST
வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலையத்தில் சோதனை நடத்திய போலீசார் ரெயிலில் இருந்து அரிசி மூட்டைகளை கைப்பற்றினர். இதில் 220 கிலோ ரேசன் அரிசி சிக்கியது.
மயிலாடுதுறை:

தமிழக அரசு ஏழை எளிய மக்களுக்கு மாதம்தோறும் இலவச அரிசி வழங்கி வருகிறது. இதனை சிலர் முறைகேடாக வாங்கி சென்று கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். மேலும் ரேசன் அரிசியை பதுக்கி அண்டை மாநிலங்களுக்கு அனுப்பும் கும்பலும் செயல்பட்டு வருகிறது.

இதுபற்றிய புகாரின் பேரில் தமிழக அரசு அதிகாரிகளை கொண்ட குழு மூலம் அதிரடி வாகன சோதனை நடத்தி ரேசன் அரிசி கடத்தலை தடுத்துவருகிறது. இதை தொடர்ந்து ரெயில்களிலும் ரேசன் அரிசி கடத்தும் சம்பவம் நடைபெறுகிறது. ரெயிலில் ரேசன் அரிசி கடத்துவதை தடுக்க திருச்சி கோட்ட ரெயில்வே கண் காணிப்பாளர் ஆனி விஜயா உத்தரவிட்டதின் பேரில் ரெயில்வே போலீசார் திருச்சி கோட்டத்துக்கு உள்பட்ட ரெயில் நிலையங்களில் இருந்து செல்லும் ரெயில்களில் தீவிர சோதனை நடத்தி ரேசன் அரிசி கடத்தலை தடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் விழுப்புரம் - மயிலாடுதுறை ரெயில் நேற்று மாலை 5.30 மணி அளவில் வைத்தீஸ்வரன் கோவில் ரெயில் நிலையம் வந்தது. அதில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் ஏட்டுக்கள் அய்யப்பன், இளவழகன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ரெயிலில் கிடந்த அரிசி மூட்டைகளை கைப்பற்றி சோதனை செய்தனர். இதில் 220 கிலோ ரேசன் அரிசி சிக்கியது.

போலீசாரை கண்டதும் ரேசன் அரிசியை கொண்டு வந்த நபர்கள் தப்பி சென்று விட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி நாகை குடிமை பொருள் புலனாய்வு பிரிவில் ஓப்படைக்கபட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News