செய்திகள்

கவுந்தப்பாடியில் என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2016-10-17 17:55 GMT   |   Update On 2016-10-17 17:56 GMT
கவுந்தப்பாடியில் வேலை கிடைக்காத விரக்தியில் என்ஜினீயரிங் பட்டதாரி வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி அண்ணா மார் கோவில் மேடு, அய்யன் வலசு பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி (வயது 60). இவரது மனைவி சுசிலா. இவர்களுடைய மகன் மெய்நாதன்(26). என்ஜினீ யரிங் பட்டதாரி.

மெய்நாதன் கடந்த 3 வருடமாக பல இடங்களில் வேலை தேடியுள்ளார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்தாராம்.

மேலும் மெய்நாதன் படிப்புக்காக அவரது தந்தை ஒரு ஏக்கர் நிலத்தை அடமானம் வைத்து கடன் வாங்கி இருந்தார். இதனால் அவரது குடும்பம் ஏழ்மையான நிலையில் இருந்துள்ளது.

சம்பவத்தன்று மெய்நாதன் வேலை கிடைக்க வில்லை என்றும் பெற்றோரை கடன்காரர்களாக ஆக்கி விட்டேன் என்றும் அழுது வருத்தப்பட்டார். அவரை அவரது தாய் சுசிலா சமாதானப்படுத்தினார்.பின்னர் அனைவரும் தூங்க சென்று விட்டனர்.

இந்த நிலையில் நள்ளிரவில் வீட்டின் பின்புறம் உள்ள கோவில் அருகில் உள்ள வேப்பமரத்தில் மெய்நாதன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். காலையில் சுசிலா தனது மகனை எழுப்ப கதவை தட்டினார். ஆனால் பதில் வராததால் சந்தேகம் அடைந்து ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். மெய்நாதனை காணவில்லை. இதனால் பதற்றம் அடைந்த சுசிலா தனது உறவினர்களுடன் மெய்நாதனை தேடினார். அப்போது அவரது வீட்டின் பின்னால் கோவில் அருகில் உள்ள வேப்பமரத்தில் மெய்நாதன் தூக்கு மாட்டி பிணமாக தொங்கி கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். கதறி அழுதனர். இது குறித்து கவுந்தப்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போலீசார் மெய் நாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

Similar News