செல்போனில் பேசியதை கண்டித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை
நாகப்பட்டினம்:
நாகூர் அருகே உள்ள கண்ணமங்கலம் காலனியை சேர்ந்த இளங்கோவன்- பழனியம்மாள் ஆகியோரின் மகள் பிரியங்கா (வயது 18). இவர் நாகையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. இரண்டாமாண்டு படித்து வந்தார்.
பிரியங்கா செல்போனில் நீண்ட நேரம் பேசி வந்ததால் சந்தேகம் அடைந்த பழனியம்மாள் அவரை கண்டித்து வந்தார். மேலும் கடந்த 2 மாதமாக பிரியங்கா கல்லூரி செல்லவும் அனுமதிக்கவில்லை.
இந்த நிலையில் சம்பவத்தன்று பிரியங்கா பாத்ரூமில் இருந்து செல்போனில் பேசி உள்ளார். இதனை கண்ட பழனியம்மாள் தனது மகளை மீண்டும் கண்டித்துள்ளார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பிரியங்கா எலிமருந்தை சாப்பிட்டு மயங்கி விழுந்தார். அவரை மீட்டு நாகை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பயனளிக்காமல் பிரியங்கா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து நாகூர் இன்ஸ்பெக்டர் நடராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் நாகூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.