செய்திகள்

சீர்காழி அருகே தங்கையை கொலை செய்த அண்ணன் கைது

Published On 2016-10-11 14:52 IST   |   Update On 2016-10-11 14:53:00 IST
சீர்காழி அருகே தங்கையை கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

சீர்காழி:

நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கொள்ளிடம் தாண்டவன் குளத்தை சேர்ந்தவர் அகோர மூர்த்தி. இவரது மனைவி சீத்தா (35). இவர்களுக்கு குழந்தை இல்லை. அகோர மூர்த்தி கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்தில் படகு கட்டும் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

தாண்டவன் குளத்தில் சீத்தா தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 19-ந் தேதி சீத்தாவின் வீடு நீண்ட நேரமாக பூட்டப்பட்டு இருந்ததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் பின் பக்கம் சென்று பார்த்தனர். அப்போது பின்பக்க கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது சீத்தா கழுத்தில் கத்தி குத்தப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.

அவரை கொள்ளை கும்பல் கொலை செய்துவிட்டு நகையை கொள்ளையடித்து சென்றிருக்கலாம்? என்ற கோணத்தில் புதுப்பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதுகுறித்து சீத்தாவின் அண்ணன் எத்திராஜ் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் சுதாகர், விஜய்கணேஷ், அருள் ஆகியோர் கொள்ளையர்களை தேடி வந்தனர்.

நீண்ட நாட்களாகியும் கொலையாளி யார்? என்பதை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் திணறிவந்தனர். இந்நிலையில் சீத்தாவின் தவறான நடவடிக்கை பற்றி அப்பகுதி பொதுமக்கள் போலீசாரிடம் கூறியதையடுத்து இந்த வழக்கு விசாரணையை வேறு கோணத்தில் விசாரிக்க தொடங்கினர். இதனை தொடர்ந்து சீத்தாவின் கணவர் மற்றும் அவரது உறவினர்களிடமும் தொடர்ந்து விசாரணை செய்துவந்தனர். இருந்து 20 நாட்களாக கொலையாளியை கண்டுபிடிக்க முடியாமல் போலீசார் தவித்தனர்.

இந்நிலையில் சீத்தாவின் அண்ணன் எத்திராஜ் (வயது 37) நேற்று புதுப்பட்டினம் வி.ஏ.ஓ விமல்ராஜிடம் தனது தங்கை சீதாவை கொலை செய்தது நான்தான் என கூறி சரணடைந்தார். அவரை புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசனிடம் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசாரிடம் அவர் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-

கணவர் வெளியூரில் வேலை பார்த்து வந்ததால் வீட்டில் தனியாக வசித்து வந்த தனது தங்கை வேறு நபர்களுடன் தகாததொடர்பு வைத்திருப்பதாக எனக்கு தகவல் வந்தது. இதனால் நான் சீத்தாவை கண்டித்தேன். பின்னர் எனக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்ததால் அங்கு சென்று வேலை பார்த்து வந்தேன். அப்போது எனது மனைவி காயத்திரி வேறு நபர்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக சீத்தா என்னிடம் தெரிவித்தார்.

இதனால் சந்தேகமடைந்து உடனே வெளிநாட்டில் இருந்து கிளம்பி ஊருக்கு வந்து எனது மனைவி காயத்திரியை கண்டித்தேன். நான் அப்படிப்பட்ட பெண் கிடையாது என கோபித்துக்கொண்டு அவரது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். எனது மனைவி குறித்து தவறாக கூறி என்னிடம் இருந்து அவரை பிரித்ததால் சீத்தாவின் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

இதனால் கடந்த 19-ந் தேதி சீத்தாவின் வீட்டின் பின்பக்க கதவை திறந்து உள்ளே சென்றேன். அங்கு அறையில் தூங்கிக்கொண்டிருந்த சீத்தாவின் கழுத்தில் கத்தியால் குத்தினேன். இதில் சீத்தா துடிதுடித்து இறந்தார். போலீசார் நான் கொலை செய்ததை கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக கொள்ளையர்கள் கொலை செய்தது போல் மாற்றி அவரது கழுத்தில் இருந்த 3 பவுன் செயினை மட்டும் பறித்துக்கொண்டு வீட்டில் இந்த துணி மற்றும்பொருட்களை கலைத்து போட்டுவிட்டு ஒன்றும் தெரியாதது போல் என் வீட்டில் வந்து படுத்துக்கொண்டேன்.

அதிகாலை சீத்தா கொலை செய்யபட்டிருப்பதாக தகவல் பரவியதை தொடர்ந்து அங்கு என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக சென்றேன். அப்போது போலீசார் கொள்ளையர்கள் கொலை செய்திருக்கலாம் என்று விசாரணை நடத்த தொடங்கினர். நானும் என்மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக தனது தங்கையை கொலை செய்தவர்களை கண்டுபிடிக்குமாறு போலீசில் புகார் தெரிவித்துவிட்டு நிம்மதியாக இருந்தேன்.

இந்நிலையில் போலீசாரின் விசாரணை எங்கள் பக்கம் திரும்பியது. போலீசார் என்னிடமும் எனது உறவினர்களிடமும் தொடர்ந்து விசாரணை செய்து வந்தனர். இதனால் நான் எப்படியும் மாட்டிக்கொள்வேன் என பயந்து வி.ஏ.ஓவிடம் சரண்அடைந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து எத்திராஜை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

Similar News