செய்திகள்

வேதாரண்யம் அருகே சவுக்கு தோப்பில் கிடந்த பெண் குழந்தை மீட்பு

Published On 2016-10-04 15:40 IST   |   Update On 2016-10-04 15:40:00 IST
வேதாரண்யம் அருகே சவுக்கு தோப்பில் கிடந்த பெண் குழந்தையை அதிகாரிகள் மீட்டனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம், செட்டியார்குத்தகை பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருக்கு சொந்தமான சவுக்கு தோப்பு வழியாக அதே பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் மனைவி கமலம்மாள் நடந்து சென்றபோது, குழந்தை அழும் சத்தம் கேட்டு, பார்த்தபோது அங்கு பிறந்து சில நாட்கள் ஆன பெண் குழந்தை இருந்ததை கண்டு அதை மீட்டார்.

இந்நிலையில் பஞ்சநதிக்குளம் மேலச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாதததால் மீட்கப்பட்ட குழந்தையை தான் வளர்ப்பதாக விருப்பம் தெரிவித்து எடுத்துச் சென்றார்.

தகவலறிந்த வருவாய் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் பெண் குழந்தையை மீட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தினர். பின்னர் மாவட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் தொட்டில் குழந்தை வளர்ப்புத் திட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அரசின் விதிகளுக்கு உட்பட்டு குழந்தையை தத்தெடுக்க மாவட்ட நிர்வாகத்தை அணுகும்படி குழந்தையை வளர்க்க விருப்பம் தெரிவித்த தம்பதிக்கு அரசுத்துறையினர் அறிவுறுத்தினர்.

Similar News