பெருந்துறை அருகே பஸ்-லாரி நேருக்கு நேர் மோதல்: கல்லூரி மாணவி உள்பட 6 பேர் படுகாயம்
ஈரோடு:
கோவையில் இருந்து ஈரோட்டுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை ஒரு அரசு பஸ் வந்து கொண்டு இருந்தது. இந்த பஸ் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக ஒரு லாரி வந்து கொண்டு இருந்தது.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றி கொண்டு வந்த அந்த லாரியும் பஸ்சும் கண் இமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி கொண்டன.
இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் பயந்து போய் அய்யோ அம்மா என்று அலறினார்கள்.
இதில் பஸ்சில் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிசியோ தெரபி படித்து வரும் அவினாசியை சேர்ந்த விஜி வேகா (20) என்ற மாணவி இன்று கல்லூரிக்கு செல்வதற்காக வந்து கொண்டு இருந்தார்.
பஸ் -லாரி மோதலில் மாணவி விஜி வேகா படுகாயம் அடைந்தார். மேலும் பஸ்சில் பயணம் செய்த பிரியா (வயது 19), ராமாத்தாள் (41), முத்தாயாள் (65), சஞ்சீவ் குமார் (49) ஆகியோரும் காயம் அடைந்தனர்.
மேலும் கிணத்துக்கடவை சேர்ந்த லாரி டிரைவர் குமார வடிவேலுக்கு இந்த விபத்தில் காலில் முறிவு ஏற்பட்டது. இடுபாடுகளுக்குள் சிக்கிய அவரை மீட்டனர்.
இந்த விபத்தில் காயம் அடைந்த 6 பேரும் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார்கள்.
இது குறித்து பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.