செய்திகள்

சாஸ்திரி நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பொன்விழா தொடங்கியது

Published On 2016-08-30 14:23 IST   |   Update On 2016-08-30 14:23:00 IST
வட சென்னை சாஸ்திரி நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலய பொன்விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வடசென்னை வியாசர்பாடி சாஸ்திரி நகர் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் பொன் விழா ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி எருக்கஞ்சேரி புனித சூசையப்பர் ஆலயத்தில் இருந்து 3 மதங்களை சேர்ந்த பெரியோர்களால் அன்னையின் திருவுருவ கொடி பவனியாக கொண்டு வரப்பட்டு ஆயர் டாக்டர் தாமஸ் பால்சாமி கொடியேற்றி வைத்தார்.

50-வது பொன்விழாவையொட்டி மும்மதத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதனை பங்குதந்தை பாலசாமி வழங்கினார். நிகழ்ச்சியில் எம்.ஏ. சேவியர் இருதய மணி, அசோக்குமார், உள்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விழா தொடர்ந்து அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந் தேதி வரை நடக்கிறது விழா நாட்களில் தினமும் காலை மாலை வேளைகளில் திருப்பலி, நற்கருணை ஆசிர், தேர் பவனி நடக்கிறது. வருகிற 3-ந் தேதி மாலை 6மணிக்கு சென்னை-மயிலை உயர்மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலை மையில் ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது. பின்னர் பர்மாவில் இருந்து தாயகம் திரும்பிய வியாசர்பாடி சாஸ்திரிநகர் இறை மக்களின் வரலாற்றை நினைவு கூறும் வரலாறு ஆவணப்படமாக வெளியிடப்படுகிறது.

7-ந்தேதி மாலை 6 மணிக்கு அன்னையின் ஆண்டு திருவிழாவையொட்டி ஆடம் பர தேர்பவனி நடக்கிறது. அதனை தொடர்ந்து பேராயர் பாப்புசாமி தலைமையில் அன்னைக்கு மணி மகுடம் சூட்டும் நிகழ்வு மற்றும் கூட்டுதிருப்பலி நடக்கிறது. 8-ந்தேதி அன்னையின் பிறந்த நாளையொட்டி காலை முதல் சிறப்பு திருப்பலியும், மாலை 4.30 மணிக்கு அருட்தந்தை அதிரூபன் தலைமையில் ஆடம்பர திருப்பலியும் தொடர்ந்து கொடி இறக்கமும், நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை திருத்தல அதிபரும்பங்கு தந்தையுமான எம்.பாலசாமி உதவி பங்கு தந்தை கிரீத்மேத்யூஸ், மற்றும் அருட்சகோதரிகள், விவேகானந்தாநகர், எம். சூசை, மயிலை எஸ் மார்ட்டின் மற்றும் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.

Similar News