செய்திகள்

ஜெயங்கொண்டம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா?: சட்டசபையில் ராமஜெயலிங்கம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2016-08-25 16:24 IST   |   Update On 2016-08-25 16:25:00 IST
ஜெயங்கொண்டம் பகுதியில் புறவழிச்சாலை அமைக்கப்படுமா? என ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் சட்டமன்றத்தில் வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் சட்டசபையில் தொகுதி மக்களின் பிரச்சனைகள் குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்.

கடந்த 19-ந்தேதி தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கம் தனது துணை வினாவின் போது முதல்வரிடம் தனது கோரிக்கையை முன்வைத்து பேசியதாவது:-

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தேர்தல் பிரசாரத்தின் போது புரட்சித் தலைவி அம்மா, நமக்கு நாமே என்றில்லாமல், நமக்கு மக்கள்தான் முக்கியம் என்று கோரிக்கை வைத்து, அதற்கு மக்களும் ‘குடும்ப ஆட்சி வராமல் முடியட்டும், தமிழகம் அம்மா தலைமையில் விடியட்டும்’ என்று தீர்ப்பளித்து தமிழகத்தில் 6-வது முறையாக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இதற்காக முதல்வரின் மலர்ப்பாதங்களை வணங்கி, ஜெயங்கொண்டம் நகரம் மிகவும் பழமைவாய்ந்த நகரம், அரியலூர் மாவட்டத்திலே ராஜேந்திர சோழனால் உருவாக்கப்பட்ட நகரம், இங்கு நான்கு புறங்களிலும் பெரிய நகரங்கள் இருக்கின்ற காரணத்தினால் ஜெயங்கொண்டம் நகரத்திற்கு புறவழிச்சாலை அமைக்கப்படுமா என்பதை பேரவைத் தலைவர் வாயிலாக அமைச்சரிடம் கேட்டு அமர்கிறேன்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசுகையில், ஜெயங்கொண்டத்திற்கு புறவழிச்சாலை அமைக்க வேண்டுமென்று இங்கே உறுப்பினர் கோரிக்கை வைத்திருக்கின்றார்.

ஜெயங்கொண்டம் நகராட்சியிலே அந்தப் பகுதியிலே செல்லுகின்ற வாகனங்களுடைய எண்ணிக்கையை ஆய்வு செய்து, அந்த ஆய்விலே உறுப்பினர் சொல்வதைப் போல அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்ற பட்சத்தில் நடப்பாண்டில் நிதிநிலைமைகளுக்கேற்ப அரசு ஆவன செய்யும் என்பதை பேரவைத் தலைவர் வாயிலாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஜெயங்கொண்டம் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக தொடர்ந்து சட்டசபையில் குரல் கொடுத்து தொகுதியின் வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் எம்.எல்.ஏ. ராமஜெயலிங்கத்தை மக்கள் பெரிதும் பாராட்டி பேசுவது மக்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

Similar News