செய்திகள்

நிழற்குடையில் கார் மோதி விபத்து: என்ஜினீயர் பலி, மனைவி உள்பட 3 பேர் படுகாயம்

Published On 2016-08-22 21:38 IST   |   Update On 2016-08-22 21:38:00 IST
ஜெயங்கொண்டம் அருகே நிழற்குடையில் கார் மோதியதில், திருமணமாகி 10 நாளே ஆன என்ஜினீயர் பரிதாபமாக இறந்தார். மேலும் அவரது மனைவி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஜெயங்கொண்டம்:

சென்னை திருவள்ளூர் மாவட்டம் வெங்கட்டாபுரத்தை சேர்ந்தவர் சுமன் (வயது 33). இவர் பக்ரைன் நாட்டில் ஒரு தனியார் நிறுவனத்தில் கம்யூட்டர் என்ஜினீயராக பணிபுரிந்து வந்தார். இவருக்கும், அதே நிறுவனத்தில் பணிபுரியும் பிந்து என்ற பெண்ணுக்கும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

இந்நிலையில் கும்பகோணம் அருகேயுள்ள சனீஸ்வரன் கோவிலில் சாமி கும்பிடுவதற்காக சுமன் தனது மனைவி பிந்து மற்றும் தாய், தந்தையுடன் காரில் சென்று கொண்டிருந்தார். காரை சுமன் ஒட்டி சென்றார். அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள தென்னவநல்லூர் கிராமம் அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக கார் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நிழற்குடையில் மோதியது. இதில் நிழற்குடை இடிந்து காரின் மீது விழுந்தது.

இந்த விபத்தில் காரில் இருந்த 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து, படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுமன் பரிதாபமாக உயிரிழந்தார். சுமனின் மனைவி, தாய், தந்தை ஆகியோர் மேல்சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 10 நாளில் கம்யூட்டர் என்ஜினீயர் விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.

Similar News