அலுவலகம் பூட்டப்பட்ட விவகாரம்: அரியலூர் கலெக்டரை கண்டித்து பத்திர பதிவுத்துறை ஊழியர்கள் போராட்டம்
அரியலூர்:
அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சரவணவேல்ராஜ் தலைமையில் கடந்த 13–ந்தேதி மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு பத்திர பதிவுத்துறை உயர் அதிகாரிகள் வரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து அரியலூர் மாவட்ட பதிவாளர் நிர்வாக பிரிவு அலுவலகத்தை பூட்ட கலெக்டர் உத்தரவிட்டார். கடந்த 13–ந்தேதி மதியத்தில் இருந்து 14–ந்தேதி மதியம் வரை அந்த அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது.
பணி செய்து கொண்டிருந்த பணியாளர்களையும் சேவை பெற வந்த பொதுமக்களையும் வெளியேற்றி விட்டு, அலுவலகத்தை பூட்டியதால் பதிவுத்துறை பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அரியலூர் மாவட்ட பதிவாளர் 14–ந்தேதி அன்று கலெக்டரிடம் மன்னிப்பு கோரிய பின்னர், அந்த அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது. இந்த சம்பவம் பதிவுத்துறை அலுவலர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அரியலூர் கலெக்டரை கண்டித்து போராட்டம் நடத்த பதிவுத்துறையை சேர்ந்த 3 சங்கங்கள் இணைந்து கூட்டு நடவடிக்கை குழுவை உருவாக்கின.
இந்த குழு எடுத்த முடிவின்படி இன்று தமிழகத்தில் உள்ள சுமார் 65000 பதிவுத்துறை பணியாளர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி செய்வது எனவும், ஜூலை 16–ல் திருச்சியில் கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு செய்வது எனவும் தீர்மானித்தனர்.
அதன்படி தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்கள், 50 மாவட்ட பதிவாளர் அலுவலகங்கள், 9மண்டல அலுவலகங்களில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் இன்று கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர். அரியலூரில் மாவட்ட பதிவாளர் அலுவலகம் மற்றும் 20 சார்பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரியும் 60 ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.
மேலும் அனைத்து பதிவுத்துறை அலுவலகங்கள் முன்பு, போராட்ட காரணம் குறித்து பதாகைகள் வைத்திருந்தனர்.