செய்திகள்

ஜெயங்கொண்டம் அருகே வாகன சோதனை: உரிய ஆவணங்களின்றி கடலை வியாபாரி கொண்டு வந்த ரூ.2¼ லட்சம் பறிமுதல்

Published On 2016-04-27 17:28 IST   |   Update On 2016-04-27 17:28:00 IST
ஜெயங்கொண்டம் அருகே உரிய ஆவணங்களின்றி கடலை வியாபாரி கொண்டு வந்த ரூ.2¼ லட்சத்தை பறிமுதல் செய்து தேர்தல் நிலை கண்காணிப்புக் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டத்திற்குட்பட்ட அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் சட்டமன்ற தேர்தலையொட்டி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. இதையொட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுப்பதற்காகவும், தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த ஆபரணங்கள் பரிசு பொருட்களாக வழங்கப்படுவதை தடுப்பதற்காகவும் தேர்தல் பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஜெயங்கொண்டம்-தா.பழூர் ரோடு அணைக்குடம் பகுதியில் ஜெயங்கொண்டம் தொகுதி நிலை கண்காணிப்புக்குழு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் உள்பட போலீசார் அடங்கிய குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த லாரியை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையின் போது லாரியில் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக லாரியில் இருந்த கடலை வியாபாரியான கடலூர் மாவட்டம் பண்ருட்டி தாலுகா தாழப்பட்டு பகுதியை சேர்ந்த பிரேம்குமாரிடம் விசாரித்த போது, அரியலூர் மாவட்டம் காசான் கோட்டை பகுதியில் விவசாயிகளிடம் நிலக்கடலை கொள்முதல் செய்வதற்காக பணம் கொண்டு செல்வதாக தெரிவித்தார். எனினும் அந்த பணத்திற்கு உரிய ஆவணங்களோ, ரசீதோ சமர்ப்பிக்கப்படவில்லை.

இதையடுத்து அந்த பணத்தை நிலை கண்காணிப்புக்குழுவினர் பறிமுதல் செய்து ஜெயங்கொண்டம் சார்நிலைக்கருவூலத்தில் ஒப்படைத்தனர். மேலும் உரிய ஆவணங்களை கருவூலத்தில் செலுத்தி மீண்டும் பணத்தை பெற்று கொள்ளலாம் என பிரேம் குமாரிடம் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். கடலை வியாபாரியிடம் ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஜெயங்கொண்டம் தொகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News