செய்திகள்

சென்னை டிரைவர் அடித்துக்கொலை: தந்தை - மகன் உள்பட 14 பேருக்கு ஆயுள் தண்டனை-அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு

Published On 2016-04-21 04:19 IST   |   Update On 2016-04-21 04:19:00 IST
சென்னையைச் சேர்ந்த டிரைவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் தந்தை - மகன் உள்பட 14 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து அரியலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உட்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்ன ஜெயந்த் (வயது 29). சென்னையில் டிரைவராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சொந்த ஊருக்கு சென்றிருந்தார்.

இந்த நிலையில் கடந்த 19-4-2012 அன்று சின்னஜெயந்த்தின் அண்ணன் மனைவிக்கு, அதே ஊரைச் சேர்ந்த திவாகர் (26) போலீஸ் வேலைக்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தார். இதை அறிந்த சின்னஜெயந்த் ஆத்திரம் அடைந்து, திவாகரின் வாயில் ஓங்கி குத்தி விட்டார். இதில் திவாகரின் பல் உடைந்து அவருக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த திவாகர், மறுநாள் தனது தந்தை அய்யாப்பிள்ளை மற்றும் அந்த கிராமத்தை சேர்ந்த 15-க்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து உருட்டு கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் சின்ன ஜெயந்தை அடித்துக் கொலை செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக திவாகர், அய்யாப்பிள்ளை (54), சுரேஷ் (44), பரமசிவம் (44), மணிகண்டன் (37), பார்த்திபன் (34), விக்னேஷ் (39), அர்ச்சுனன் (64), ஆனந்த் (34), அன்பரசன் (49), கலைமணி (24), குண்டு (29), மற்றொரு சுரேஷ் (26), கொளஞ்சி (26) ஆகிய 14 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்த வழக்கின் இறுதி விசாரணை அரியலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.கே.ஏ.ரகுமான், வாலிபரை அடித்துக் கொலை செய்த திவாகர், அவரது தந்தை அய்யாப்பிள்ளை உள்ளிட்ட 14 பேருக்கும் தலா இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6 ஆயிரம் அபராதம் வழங்கி தீர்ப்பு கூறினார்.

ஆனால் இரட்டை ஆயுள் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். அதனால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Similar News