ஜெயங்கொண்டம் பகுதிகளில் வாகனசோதனையில் ரூ.1.95 லட்சம் பறிமுதல்
ஜெயங்கொண்டம்:
ஜெயங்கொண்டம் பகுதிகளில் தேர்தல் நிலையான கண்காணிப்புக்குழு–2 துணைத் தாசில்தார் கண்ணன் தலைமையில், எஸ்.ஐ. பன்னீர்செல்வம் மற்றும் போலீசார் மதியழகன், பாலமுருகன் உள்ளிட்டோர் சென்னை– கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை பாப்பாக்குடி பெட்ரோல் பங்கு அருகே வாகனசோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது புவனகிரியிலிருந்து கும்பகோணம் நோக்கி சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டதில், புவனகிரியில் சீவல் மொத்த வியாபாரம் செய்துவிட்டு உரிய ஆவணமின்றி எடுத்து வந்த சூப்பர்வைசர் கார்த்திக்குமார் என்பவரிடமிருந்து ரூ.90 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் தேர்தல் பறக்கும்படை துணை தாசில்தார் எலிசபெத்மேரி தலைமையில், எஸ்.ஐ. மலரழகன், காவலர்கள் மாயகிருஷ்ணன், நிக்கோலஸ், காமராஜன் ஆகியோர்கொண்ட குழு விருத்தாசலம் – ஜெயங்கொண்டம் சாலை மகிமைபுரம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியே வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டதில் திருவண்ணாமலை ஆரோக்கியதாஸ் மகன் தேவதாஸ் என்பவர் நெல் வியாபாரம் செய்துவிட்டு உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.53 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.
இன்று அதிகாலை 5 மணியளவில் நிலையான கண்காணிப்பு குழு–3 துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, எஸ்.ஐ. மணிவண்ணன், காவலர்கள் ஜெகதீசன், பழனிவேல் ஆகியோர் கொண்ட குழு ஜெயங்கொண்டம் – திருச்சி சாலை மார்க்கெட் கமிட்டி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது கடலூர் மாவட்டம், ஆயங்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில் ஆயக்குடி ஷேக்தாவூத் மகன் அபுசலி என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்து வந்த ரூ.52 ஆயிரத்து 750–ஐ பறிமுதல் செய்தனர்.
மேலும் கடலூர் மாவட்டம் நங்குடியிலிருந்து திருச்சி நோக்கி சென்ற தனியார் கம்பெனிக்கு சொந்தமான 50 கமர்சியல் காலி சிலிண்டர்களை நங்குடி கிராமம் பன்னீர்செல்வம் மகன் மதியழகன் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்து சென்றதை பறிமுதல் செய்தனர்.
இக்குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 லட்சத்து 95 ஆயிரத்து 750–யை ஜெயங்கொண்டம் கருவூலத்தில் அதிகாரிகள் செலுத்தினர். 50 காலி சிலிண்டர்களை ஜெயங்கொண்டம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபகழக அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.