செய்திகள்

ஆண்டிமடம் அருகே மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்து: வாலிபர் பலி

Published On 2016-04-10 22:58 IST   |   Update On 2016-04-10 22:58:00 IST
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வரதராஜன்பேட்டை:

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே அருளானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாஸ் (வயது 32). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அருள்மேரி (26). இவர்களுக்கு பிரிட்டன் என்கிற 5 வயது மகன் உள்ளான்.

நேற்று முன்தினம் சென்னையில் இருந்து தனது சொந்த ஊருக்கு ஏசுதாஸ் வந்தார். இந்நிலையில் மேலநெடுவாய் பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டில் அருள்மேரி இருப்பதை அறிந்து அவரை பார்ப்பதற்காக ஏசுதாஸ் நேற்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். மேலநெடுவாய் அருகே ஆண்டிமடம்- இடையக்குறிச்சி சாலையில் உள்ள வளைவில் திரும்பியபோது எதிர்பாராதவிதமாக அங்கிருந்த பனை மரத்தின் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ஏசுதாஸ் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆண்டிமடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் ஏசுதாசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அருள்மேரி மற்றும் அவரது உறவினர்கள் ஏசுதாசின் உடலை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. விபத்து குறித்து ஆண்டிமடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலநெடுவாய் கிராம பஸ் நிறுத்தம் அருகில் சாலையை ஒட்டி குளம் மற்றும் பனைமரங்கள் உள்ளன. இதனால் அந்த வளைவான பகுதியில் அடிக்கடி விபத்து நடக்கிறது. எனவே அங்குள்ள பஸ் நிறுத்தத்தினை சிறிது தூரம் தள்ளி வேறொரு இடத்திற்கு மாற்றி அமைக்க வேண்டும். சாலையோர பனை மரங்களை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Similar News