அரியலூர் அருகே வாகன சோதனையில் 2 கிலோ தங்கம் சிக்கியது
அரியலூர்:
அரியலூர் தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி தாரகேஸ்வரி தலைமையில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் திருமேனி மற்றும் ஏட்டுகள் காமராஜ், அழகப்பன், சந்திரமோகன் ஆகியோர் அரியலூர் அருகே கீழப்பழுவூரை அடுத்த பொய்யூர் கிராமத்தில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக தஞ்சாவூரை சேர்ந்த ஒரு பிரபல தங்க நகைக்கடையின் வேன் வந்தது. அதனை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது அந்த வேனில் நகைக்கடையின் பாதுகாப்பு பிரிவு ஊழியர் செல்வக்குமார், டிரைவர் உள்பட 3 பேர் இருந்தனர். அவர்களிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது அவர்கள்,சென்னையில் உள்ள தங்களது நகைக்கடை நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் இருந்து தஞ்சாவூரில் உள்ள கிளை அலுவலகத்திற்கு தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களை எடுத்து செல்கிறோம், மேலும் இதனை திறந்து பார்ப்பதற்கான சாவி எங்களிடம் இல்லை.
தஞ்சாவூரில் உள்ள எங்களது நகைக்கடை அதிகாரிகளை வரவழைத்தால் தான் இதனை திறந்து பார்க்க முடியும் என பறக்கும் படை குழுவினரிடம் செல்வக்குமார் தெரிவித்தார். இதையடுத்து பறக்கும் படை குழுவினர் அந்த வேனை அரியலூர் தாசில்தார் அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர்.
இதற்கிடையே பறக்கும் படை அதிகாரியின் உத்தரவுப்படி தஞ்சாவூரில் இருந்து அந்த நகைக்கடை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த சாவியின் மூலம் வேனின் பின்பக்க கதவினை திறந்து அதிலிருந்த நகைப்பெட்டிகளை எடுத்து தாசில்தார் அலுவலகத்தினுள் வைத்தனர். பின்னர் அரியலூர் தொகுதி தேர்தல் உதவி தாசில்தார் அமுதா முன்னிலையில் நகைப்பெட்டிகளை திறந்து அதில் இருந்த நகைகளுக்குரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டன. அப்போது 2 கிலோ 543 கிராம் எடை கொண்ட தங்க நகைகளும், 874 கிராம் எடை கொண்ட வெள்ளி பொருட்களும் இருந்தது தெரியவந்தது.
தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்களுக்கான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டு சரியாக இருந்ததால், அவற்றை அந்த நகைக்கடை அதிகாரிகளிடம் தேர்தல் பறக்கும் படையினர் ஒப்படைத்தனர்.