மூதாட்டியை தாக்கி நகை பறிக்க முயன்ற 2 பெண்கள் கைது
- தண்ணீர் கேட்பது போல் நடித்து துணிகர செயல்
- தடாகம் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்
கோவை,
கோவை தடாகம் அருகே உள்ள காளையனூரை சேர்ந்தவர் கோவிந்தன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 75). சம்பவத்தன்று இவர் தனது வீட்டு முன்பு அமர்ந்து இருந்தார். அப்போது 2 பெண்கள் அந்த வழியாக வந்தனர். அவர்கள் சரஸ்வதியின் அருகில் வந்து குடிப்பதற்கு தண்ணீர் கேட்டனர். இதனையடுத்து அவர் தண்ணீர் எடுப்பதற்காக வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவரை பின் ெதாடர்ந்து 2 பெண்களும் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் தண்ணீர் எடுத்து கொண்டு இருந்த சரஸ்வதியை கீழே தள்ளி தாக்கினர். பின்னர் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து தப்பிச் செல்ல முயன்றனர்.
இதில் அதிர்ச்சியடைந்த மூதாட்டி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று மூதாட்டியிடம் செயினை பறித்து விட்டு தப்பிச் செல்ல முயன்ற 2 பெண்களையும் மடக்கி பிடித்தனர். பின்னர் இதுகுறித்து அவர்கள் தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர்.
அவர்களிடம் 2 பெண்களையும் பொது மக்கள் ஒப்படைத்தனர். போலீசார் 2 பெண்களையும் போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கள் சாய்பாபா காலனியை சேர்ந்த ராதிகா(33), சர்மிளா(42) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் இவர்கள் 2 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.