கோவையில் நகை கடை உரிமையாளரிடம் 2 கிலோ தங்கம் மோசடி
- ரமேஷ் 1 வருடங்களுக்கு முன்பு 2 கிலோ தங்கத்தை ரகுநாத்திடம் விற்பதற்காக கொடுத்துள்ளார்.
- ரமேஷ் இதுகுறித்து பெரிய கடை போலீசில் புகார் அளித்தார்.
கோவை,
கோவை விநாயகபுரத்தை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 56). இவர் கோவை ராஜ வீதியில் நகை கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் அதே பகுதியில் தங்க நகை வியாபாரம் செய்து வரும் கோவை செட்டித்தெருவை சேர்ந்த ரகுநாத் என்பவர் ரமேசுக்கு அறிமுகம் ஆனார். பின்னர் தான் தங்க வியாபாரம் செய்து வருவதாக அவரிடம் கூறியுள்ளார்.
இதனை உண்மையென நம்பிய ரமேசும் 1 வருடங்களுக்கு முன்பு 2 கிலோ தங்கத்தை ரகுநாத்திடம் விற்பதற்காக கொடுத்துள்ளார். ஆனால் அதனை அவர் விற்று பணத்தை ரமேசிடம் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் தங்கத்தை திருப்பி கேட்டுள்ளார்.
ஆனால் அவர் திருப்பி கொடுக்கவில்லை என தெரிகிறது. பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரமேஷ் இதுகுறித்து பெரிய கடை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ரகுநாத் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.