பிரபல ரவுடியை அரிவாளால் வெட்டிய 2 நண்பர்கள் கைது
- மது குடித்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதால் வெட்டி வீழ்த்தினர்
- கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் மான் என்ற ராஜ்குமார் (வயது 32). இவரது மனைவி ரெஜினா. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து கேரளாவில் உள்ள பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
பிரபல ரவுடியான மான் என்ற ராஜ்குமார் மீது ஏற்கனவே அடிதடி, கொலை மிரட்டல், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது. ஒரு வழக்கில் கைதாகி ஜெயிலில் இருந்த இவர் கடந்த மாதம் 14-ந் தேதி ஜாமீனில் வெளியே வந்தார்.
ரவுடி ராஜ்குமார் அவரது நண்பர்களான மண்டேலா நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஆட்டோ செந்தில் என்ற பால்கார செந்தில் (42) , எஸ்.எம். நகரை சேர்ந்த பெயிண்டர் கண்ணபிரான் (27) ஆகியோருடன் பாரதி நகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றனர். மது குடித்து கொண்டு இருந்தபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
பின்னர் ரவுடி ராஜ்குமார் மணிநகர் வழியாக வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து ஆட்டோ செந்தில், கண்ண பிரான் ஆகியோர் சென்றனர். அவர் திடீரென மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ராஜ்குமாரின் தலை, கழுத்து மற்றும் உடலில் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.
பின்னர் 2 பேரும் அங்கு இருந்து தப்பிச் சென்றனர். ராஜ்குமாருக்கு நெற்றி, வலது மற்றும் இடது கை, கழுத்து ஆகிய இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் டாக்டர்கள் ராஜ்குமாரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவுடியை வெட்டி விட்டு தலைமறைவாக இருந்த ஆட்டோ செந்தில், கண்ணபிரான் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.