கோவையில் இளம்பெண்ணிடம் நகை பறித்த 2 பேர் கைது
- மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவர் சந்தியாவை மறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.
- இதுகுறித்து சந்தியா பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
கோவை,
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை சேர்ந்தவர் சந்தியா (வயது 21). இவர் கோவை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் காசாளராக வேலை பார்த்து வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு இவர் தனது சொந்த ஊரான அறந்தாங்கிக்கு சென்றார். பின்னர் நேற்று காலை மீண்டும் கோவைக்கு தனது அக்காவுடன் வந்தார். சம்பவத்தன்று 2 பேரும் கோவை நேரு நகரில் உள்ள தங்களது வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் இருவர் சந்தியாவை மறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். மேலும் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்கசெயின் மற்றும் மொபைல் போனை அவரிடமிருந்து பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கத்தி சத்தம் போட்டார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் மர்மநபர்கள் தப்பி சென்றனர்.
பின்னர் இதுகுறித்து அவர் பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நடத்திய விசாரணையில் நகை பறிப்பில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த தியாகராஜன் (19), சங்கர் (18) என்பது தெரியவந்தது. இவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.