அன்னூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 14 பவுன் நகைகள் கொள்ளை
- போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
- வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேககளை பதிவு செய்தனர்.
கோவை,
கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள பாப்பாகவுண்டர் காலனியை சேர்ந்தவர் மொய்தீன்(வயது 44). ரியல் எஸ்டேட் அதிபர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் பூலுவபாளையத்தில் உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றார்.
அப்போது இவரது வீட்டின் முன் பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்கள் அறையில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த மோதிரம், செயின், கம்மல், வளையல், கை செயின் உள்பட 14 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
வீட்டிற்கு திரும்பிய மொய்தீன் கதவு உடைக்கப்பட்டு திறந்து இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோவில் இருந்த நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் அன்னூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
சம்பவ இடத்துக்கு கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கொள்ளையர்களின் கைரேககளை பதிவு செய்தனர்.
மேலும் அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது மொய்தீன் வீட்டில் மர்ம நபர் ஒருவர் நள்ளிரவில் புகுந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்துச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.
அந்த காட்சிகளை வைத்து மர்மநபரை தேடி வருகின்றனர்.போலீஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள வீட்டிலேயே பணம் மற்றும் நகைகள் கொள்ளை போன சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.