தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு 1,10,745 பேர் பயணம்
- கூடுதலாக 369 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.
- பேருந்து நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் வரும் 30ம் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,092 பேருந்துகளுடன் 4,900 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கு சேர்த்து ஒட்டுமொத்தமாக 11,176 பேருந்துகளும், பிறஊர்களிலிருந்து 3 நாட்களுக்கு 2,910 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 14,086 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 3,165 சிறப்பு பேருந்துகளும் 3 நாட்களும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 9,441 பேருந்துகள் ஏனைய பிற முக்கிய ஊர்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,165 சிறப்பு பேருந்துகள் என மொத்தம் 12,606 பேருந்துகள் இயக்க அனைத்து ஏற்பாடுகளும் போக்குவரத்து துறை தரப்பில் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து இயக்கப்படும் பேருந்துகள் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், மாதவரம் புதிய பேருந்து நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது.
சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப, அந்ததந்த பகுதிகளில் இருந்து சென்னை வருவதற்கும் பேருந்து வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கிளாம்பாக்கத்தில் 7 முன்பதிவு மையங்களும், கோயம்பேட்டில் 2 முன்பதிவு மையங்கள் என 9 முன்பதிவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரத்து 745 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர். இதுதவிர வழக்கமாக இயங்கக்கூடிய 2092 பஸ்களுடன் கூடுதலாக 369 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.
மேலும் பயணிகளின் நலன் கருதி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.