உள்ளூர் செய்திகள்

கோவை, பொள்ளாச்சியில் 105 வழக்குகளுக்கு தீர்வு

Published On 2023-07-09 14:40 IST   |   Update On 2023-07-09 14:40:00 IST
  • சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் இதர சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
  • மொத்தத் தீர்வுத் தொகை ரூ.8 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரத்து 464 ஆகும்.

கோவை,

கோவை, பொள்ளாச்சியில் நடைபெற்ற சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் மூலமாக 105 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) எம்.என்.செந்தில்குமார் அறிவுறுத்தல்படி, கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவிலும், பொள்ளாச்சி நீதிமன்ற வளாகத்திலும் சிறப்பு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நில ஆர்ஜித வழக்குகள், காசோலை வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய இதர வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், இதர சிவில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்த வழக்குகளை கோவையில், மாவட்ட நீதிபதி எஸ்.குமரகுரு மற்றும் கோவை மாவட்ட எட்டாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி எஸ்.தனலட்சுமி ஆகியோர் அடங்கிய அமர்வும், பொள்ளாச்சியில் சார்பு நீதிமன்ற நீதிபதி பி.மோகனவள்ளி மற்றும் பொள்ளாச்சி கூடுதல் உரிமையியல் நீதிபதி என்.பாரதிராஜா ஆகியோர் அடங்கிய அமர்வும் விசாரித்தன.

இதில், மொத்தம் 105 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டது. இதன் மொத்தத் தீர்வுத் தொகை ரூ.8 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரத்து 464 ஆகும்.

இதற்கான ஏற்பாட்டை கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலாளர் கே.எஸ்.எஸ்.சிவா செய்திருந்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News