செங்கல்பட்டில் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்ட 100 கடைகள் அகற்றம்
- சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மல்லிகா வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார்.
- ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பரத் தலைமையில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டில், காய்கறி கடைகளுக்காக நகர போலீஸ் நிலையம் எதிரே மேட்டு தெரு நெல்லுமண்டி அருகே வணிக வளாகம் கட்டப்பட்டு உள்ளது.
ஆனால் வியாபாரிகள் அந்த இடத்தை பயன்படுத்தாமல் போலீஸ் நிலையம் எதிரே உள்ள மேட்டு தெரு சாலை மற்றும் கழிவு நீர், மழை நீர் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து காய்கறி கடைகளை நடத்தி வந்தனர்.
இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அவ்வழியே சென்றவர்களும் அவதி அடைந்தனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது.
இதையடுத்து சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மல்லிகா வியாபாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தார். ஆனால் தொடர்ந்து அப்பகுதியில் வியாபாரிகள் கடை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை செங்கல்பட்டு நகராட்சி ஆணையர் மல்லிகா தலைமையில் நகர நல அலுவலர் செந்தில்குமார், வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் நகராட்சி ஊழியர்கள் ஜே.சி.பி எந்திரம் மூலம் சாலையோரம் ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த 100-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகளை அகற்றினர்.
அப்போது சில வியாபாரிகள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் சமாதானம் செய்து அப்புறப்படுத்தினர்.
ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டதையொட்டி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பரத் தலைமையில் இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "பழைய பஸ்நிலையம் அருகே உழவர் சந்தை மற்றும் அதன் அருகே உள்ள சுமார் ஒரு ஏக்கர் உள்ள இடத்தை தூய்மைபடுத்தி கழிப்பிடம், குடி நீர் வசதி, வாகனங்கள் சென்று காய்கறி இறக்கி செல்வதற்கு வேண்டிய அனைத்து வசதிகளையும் நகராட்சி நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.
எந்த வியாபாரிகளும் அங்கு சென்று விற்பனை செய்யாமல் சாலை மற்றும் கழிவு நீர் கால்வாய், மழை நீர் கால்வாய்களை ஆக்கிரமிப்பு செய்து விற்பனை செய்து வந்தனர். இதனால் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டு உள்ளது. சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.