உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜனதா தலைவர் கைது

Published On 2023-07-24 07:21 IST   |   Update On 2023-07-24 11:14:00 IST
  • கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரை பற்றி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு
  • இன்று அதிகாலை அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்

விழுப்புரம் மாவட்டம் தெற்கு பா.ஜ.க. சார்பில் விக்கிரவாண்டி பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன போன்ற 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட செயலாளர் தங்கம், பொருளாளர் குமாரசாமி, மாநில பொதுக்குழு உறுப்பினர் குமாரசாமி உள்பட பலர் பங்கேற்றனர்.

இதில் பேசிய வி.ஏ.டி. கலிவரதன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி, தி.மு.க. மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., மு.க.ஸ்டாலின் சகோதரி செல்வி ஆகியோர் குறித்து ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசியதாக தெரிகிறது.

இதுதொடர்பாக விக்கிரவாண்டி நகர தி.மு.க. துணை செயலாளர் சித்ரா, விக்கிரவாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன், சப்- இன்ஸ்பெக்டர் காத்தமுத்து ஆகியோர் வி.ஏ.டி. கலிவரதன் மீது வதந்திகளை பரப்புவது, கலகம் செய்வதற்கு தூண்டி விடுவது, ஆபாசமாக பேசுவது, அமைதியை சீர்குலைப்பது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

தொடர்ந்து விக்கிர வாண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ் தலைமையிலான போலீசார் பா.ஜ.க. தெற்கு மாவட்ட தலைவர் வி.ஏ.டி. கலிவரதனை தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை திருக்கோவிலூர் அருகே டி.தேவனூருக்கு போலீசார் விரைந்தனர். அங்கு வீட்டில் தூங்கி கொண்டிருந்த வி.ஏ.டி. கலிவரதனை போலீசார் கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பா.ஜ.க.வினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News