செய்திகள்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொன்னால் தான் எனக்கு மகிழ்ச்சி - ரஜினிகாந்த்

Published On 2018-05-30 02:51 GMT   |   Update On 2018-05-30 02:51 GMT
ஸ்டெர்லைட் போராட்டத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் சொல்வது தான் தனக்கு மகிழ்ச்சி என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். #Rajinikanth #SterliteProtest
நடிகர் ரஜினிகாந்த் கடந்தாண்டு இறுதியில் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். கட்சியை இன்னும் தொடங்கவில்லை என்றாலும். அதற்கான ஆரம்ப கட்ட பணியில் அவர் ஈடுபட்டு வருகிறார். காவிரி விவகாரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு தன்னுடைய கருத்துக்களை தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், தூத்துக்குடி துப்பாக்கி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூற தான் தூத்துக்குடிக்கு செல்வதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

சென்னை போயஸ் தோட்ட இல்லத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் பேசியதாவது, 

தூத்துக்குடியில் காயமடைந்தவர்களை சந்திக்க செல்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொன்னால்தான் எனக்கு மகிழ்ச்சி. நடிகரான என்னை பார்த்தால், தூத்துக்குடி மக்களும் மகிழ்ச்சி அடைவார்கள் என்று நம்புகிறேன். சட்டப்பேரவை கூட்டத்தொடரை திமுக புறக்கணித்தது குறித்து தான் கருத்து கூற விரும்பவில்லை என்றார். 



தூத்துக்குடி சம்பவத்திற்கு திமுகதான் காரணம் என முதலமைச்சர் குற்றச்சாட்டு குறித்த பதில் அளித்த ரஜினி, திமுகவை அதிமுகவும், அதிமுகவை திமுகவும் விமர்சிப்பது தான் அரசியல், பழைய நிகழ்வுகளை பேசி பயனில்லை என்று கூறினார்.

காலா படத்திற்கு கர்நாடகாவில் தடை விதித்திருப்பது குறித்து கேட்ட போது, கர்நாடக திரைப்பட வர்த்தக சபையுடன், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை பேச்சு நடத்தி சுமூக தீர்வு காணும் என்றார்.
#Rajinikanth #SterliteProtest #BanSterlite #SaveThoothukudi

Tags:    

Similar News