செய்திகள்

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்த 4ஆண்டுகள் காத்திருக்க வேண்டாம்: கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி

Published On 2017-03-13 10:40 IST   |   Update On 2017-03-13 13:57:00 IST
தமிழகத்தில் தற்போது நிலவிவரும் அரசியல் சூழ்நிலையின் படி சட்டசபைக்கு தேர்தல் நடத்த 4 ஆண்டுகள் வரை காத்திருக்காமல் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

‘விஸ்வரூபம்’ படத்துக்கு பிறகு எழுந்த பிரச்சனைக்கு காரணம் இஸ்லாமியர்கள் அல்ல. அரசியல்வாதிகள் தான் முழுக்க முழுக்க காரணம். எனது படத்தை வெளியிடவிடாமல் தடுத்ததே அப்போதைய ஆட்சியில் இருந்தவர்கள்தான்.

நான் பகுத்தறிவாதத்தை பேசிக்கொண்டேதான் இருப்பேன். அரசியல் வர்த்தகம் ஆகி விட்டது.

நிகழ்கால அரசியலுக்கு தீங்கு ஏற்படுமானால் நிச்சயம் குரல் கொடுப்பேன். வெறும் கலைஞனாக மட்டும் என்னால் இருக்கமுடியாது. நான் பேசினால் மக்களை சென்றடையும் என்பதால் பேசுகிறேன்.

என் வாழ்க்கையில் எந்த ஊழலுக்கும் இடம் கொடுக்கவில்லை. ஓட்டுக்களை விலை பேசினால் கேள்வி கேட்க முடியாது. எந்த ஆட்சியிலும் குற்றத்தை தட்டி கேட்கவேண்டும்.

ஜெயலலிதா மரணம் குறித்த சந்தேகத்தை தீர்க்க வேண்டிய கடமை அனைவருக்கும் உள்ளது. ஜெயலலிதா வெளிப்படையாக இருந்தது இல்லை. ஒருவேளை அவரது சிகிச்சை தொடர்பான சந்தேகத்துக்கு அதுவும் காரணம் என நினைக்கிறேன்.

தற்போதை ஆட்சியை (எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியை) ஏற்க முடியாது.

தமிழகத்தில் உடனடியாக தேர்தல் நடைபெற வேண்டும். சட்டங்கள் ஒத்துக்கொள்ளாது என்பதற்காக மக்கள் விரும்பாத அரசு ஆட்சி மேலும் 4 ஆண்டுகள் தொடரவேண்டும் என்று யாரும் சொல்லத்தேவையில்லை. அப்படி சொல்வது கட்டாய திருமணம் போன்றது. யார் இருக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.


நான் அரசியல் பேசுவதற்கு குடிமகன் என்பது தான் எனது முதல் தகுதி. சிவப்பு சட்டை அணிந்திருப்பதால் கம்யூனிஸ்ட் வாதி என்று நினைக்க வேண்டாம். முதல்வர் பிரதமர் உள்ளிட்ட அனைவரும் மக்களுக்கு சேவை செய்யும் கருவி.

என்னை அரசியல் கட்சிக்குள் கொண்டு வர நீண்ட நாட்களாக முயற்சி நடக்கிறது. ஜல்லிக்கட்டு போராட்டம் எரிமலையின் நுனி பல்வேறு கோபங்களின் வெளிப்பாடுதான் ஜல்லிக்கட்டு போராட்டம்.

தவறுகள் அதிகமாகும் போது மக்களிடம் கொந்தளிப்பு ஏற்படும். காலத்தின் தேவைக்கு ஏற்ப அரசியல்வாதிகள் மாற வேண்டும். பழைய சட்டத்தை நீக்கிவிட்டு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும்.

திராவிட கட்சிகளின் பங்களிப்பு முடிந்து விட்டதாக சொல்லமுடியாது. தமிழ்தாய் வாழ்த்து இருக்கும் வரை திராவிடம் என்ற சொல்லும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கும். திராவிடம் என்பது பூகோள ரீதியானது. அதை யாரும் மறுக்க முடியாது. தேசிய கட்சிகள் தமிழகத்திற்குள் நுழைந்தால் திராவிடத்தை நிச்சயம் ஏற்கத்தான் வேண்டும்.

ஒரு முக கலாசாரத்தை இந்தியாவில் புகுத்த முடியாது. பெண்கள் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறார்கள். இது இன்று நேற்றல்ல காலம் காலமாக தொடர்கிறது.

பொறுக்கி என்று கூறிய சுப்பிரமணியசாமியின் கருத்து தவறானது என்னுடைய குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அமைதிப்படுத்தலாமே தவிர யாரும் என்னை கட்டுப்படுத்த முடியாது.

காந்தி, பெரியார் போன்ற ஹீரோக்கள் தான் உள்ளனர். ஏனென்றால் காந்தி, பெரியார் இருவரும் தேர்தல் அரசியலில் இல்லை. கொள்கை நேரத்துக்கு நேரம் மாறும். மக்களுக்கு தேவையான அரசியலே தேவை.

ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் யாருடனும் எனக்கு பரீட்சயம் இல்லை. நான் யாருக்கும் ஆதரவாக குரல் கொடுக்கவில்லை. சினிமாவை பலரும் விமர்சனம் செய்வது போல்தான் நானும் அரசியலை விமர்சனம் மட்டுமே செய்கிறேன்.

பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஏற்றுக்கொள்கிறேன். சாதிகள் இல்லா சமுதாயம் வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News