செய்திகள்

ஷாருக் கானுக்கு கவுரவ டாக்டர் பட்டம்: ஐதராபாத் பல்கலைக்கழகம் வழங்கியது

Published On 2016-12-26 10:19 GMT   |   Update On 2016-12-26 10:19 GMT
பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு ஐதராபாத் பல்கலைக்கழகம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
ஐதராபாத் நகரில் உள்ள மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தின் ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் மவுலானா ஆசாத் உருது பல்கலைக்கழகத்தில் பயின்ற 2,885 மாணவர்களுக்கும், தொலைதூர கல்வி மூலம் பயின்ற 44,235 பேருக்கும், முனைவர் பட்டத்துக்கான ஆய்வுகளை செய்துவந்த 276 பேருக்கும் பட்டங்கள் வழங்கப்பட்டன.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில கவர்னர் நரசிம்மன், தெலுங்கானா மாநில துணை முதல் மந்திரி முஹம்மது மஹ்மூத் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்ற இவ்விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானுக்கு ‘கவுரவ டாக்டர்’ பட்டம் வழங்கப்பட்டது.



இந்த கவுரவத்துக்கு நன்றி தெரிவித்து பேசிய ஷாருக் கான், ‘ஐதராபாத் எனது தாயார் பிறந்த இடம் என்பதால் இன்று அவர் உயிருடன் இருந்திருந்தால் இந்த பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்திருப்பார்’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

முன்னதாக, இந்த பட்டமளிப்பு விழாவில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தலைமை விருந்தினராக பங்கேற்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவிர்க்க இயலாத காரணத்தால், கடைசி நேரத்தில் அந்த நிகழ்ச்சி நிரல் ரத்து செய்யப்பட்டது.

Similar News