செய்திகள்
வாக்களித்ததற்கான அடையாள மை

கடலூர் மாவட்டத்தில் 11 மணி நிலவரப்படி 26.44 சதவீத வாக்குப்பதிவு

Published On 2021-04-06 09:27 GMT   |   Update On 2021-04-06 09:27 GMT
கடலூர் மாவட்டத்தில் 1,509 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் மினி அப்சர்வர் தலைமையில் அதிகாரிகள் குழு தீவிரமாக கண்காணித்தனர்.
கடலூர்:

கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி (தனி), விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் (தனி) ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இவற்றில் 136 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். மாவட்டத்தில் மொத்தம் 21,47,295 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 10,57,478 பேர், பெண் வாக்காளர்கள் 10,89,569 பேர், இதர வாக்காளர்கள் 248 பேர் உள்ளனர்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குபதிவு தொடங்கியது. நகர பகுதியில் வாக்குப்பதிவு மந்தமாக இருந்தது. கிராமப்புற பகுதிகளில் அதிக அளவில் பெண்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.

வாக்குசாவடிக்கு வந்த அனைத்து வாக்காளர்களுக்கும் கிருமிநாசினி கைகளில் தெளிக்கப்பட்டது. அதோடு கையுறை வழங்கப்பட்டு, வெப்பமானி மூலம் பரிசோதித்த பிறகே வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

கடலூர் மாவட்டத்தில் 211 பதட்டமானவை, மிக பதட்டமான வாக்குசாவடியாக கண்டறியப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1,509 வாக்குச்சாவடி மையங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பதட்டமான வாக்குச்சாவடிகளில் மினி அப்சர்வர் தலைமையில் அதிகாரிகள் குழு தீவிரமாக கண்காணித்தனர்.

காலை 11 மணி நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 26.44 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான சந்திரசேகர்சாகமுரி, போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபநவ் தலைமையில் கண்காணிக்கப்படுகிறது.

கடலூர் மாவட்டத்தில் 3001 வாக்குசாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில் 14,404 பேர் பணியாளர்களாக செயல்பட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Tags:    

Similar News