செய்திகள்

அதிமுக அரசு 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும்: எஸ்.பி.வேலுமணி பேட்டி

Published On 2018-07-22 10:06 GMT   |   Update On 2018-07-22 10:06 GMT
அ.தி.மு.க. அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும் என்று கோவையில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். #ministerspvelumani #admk

கோவை:

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை ரேஸ்கோர்சில் உள்ள நடை பயிற்சி சாலையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி இன்று ஆய்வு செய்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரேஸ்கோர்ஸ் நடை பயிற்சி சாலை நவீன படுத்தப்பட உள்ளது. இங்கு பொதுமக்களின் வசதிக்காக திறந்த வெளி கலையரங்கம், கழிப்பிட வசதிகள், குடிநீர் வசதி, குழந்தைகளுக்கான விளையாட்டு திடல்கள், உடற்பயிற்சி கூடங்கள் நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது. இதற்காக மக்களிடம் கருத்துக்களை கேட்டு அதன் அடிப்படையில் வசதிகள் செய்து கொடுக்கப்படும். நடை பயிற்சி சாலையில் மழைநீர் சேகரிப்பு திட்டமும் செயல்படுத்தப்படும். திட்டத்தை வேகமாக செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அவரிடம் நிருபர்கள் அ.தி.மு.க. அரசு வருமான வரி சோதனைக்கு பயந்து பா.ஜனதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளது. இது தமிழகத்துக்கு செய்த துரோகம் என ஸ்டாலின் கூறி உள்ளாரே என கேட்டதற்கு வருமான வரித்துறை சோதனை வழக்கமான நிகழ்வு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. அரசு முழுமையாக 5 ஆண்டுகளை நிறைவு செய்யும்.

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு முன்பு கர்நாடக மாநிலத்திற்கு ஆதரவாக செயல்பட்ட போது அ.தி.மு.க. எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை முடக்கி உரிமையை மீட்டு எடுத்தனர்.

எம்.பி.க்கள் இல்லாத தி.மு.க.வின் ஸ்டாலின் இது குறித்து பேசுவதற்கான அவசியம் என்ன என புரியவில்லை. மத்தியில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கம் வகித்த தி.மு.க. தமிழர்களின் நலனுக்காகவோ, ஈழத்தமிழர்களின் நலனுக்காகவோ என்ன நடவடிக்கை எடுத்தது? என்றார்.

ஆய்வின் போது கலெக்டர் ஹரிஹரன், மாநகராட்சி கமி‌ஷனர் விஜயகார்த்திகேயன், போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா, மாநகராட்சி துணை கமி‌ஷனர் காந்திமதி,எம்.எல்.ஏ.,க்கள் பி.ஆர்.ஜி. அருண்குமார், அம்மன் அர்ச்சுணன், மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். #ministerspvelumani #admk

Tags:    

Similar News