செய்திகள்

தேர்தல் வரும் போது கட்சிகள் நிலைமை மாறும்- பொன். ராதாகிருஷ்ணன்

Published On 2018-07-14 13:22 IST   |   Update On 2018-07-14 13:22:00 IST
தேர்தல் வரும் போது அரசியல் கட்சிகள் நிலைமை மாறும் என்று திருச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். #PonRadhakrishnan
திருச்சி:

திருச்சியில் இன்று மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கே: மத்திய அரசின் நடவடிக்கைகள் மாநில அரசின் உரிமைகளை பறிப்பது போல் உள்ளது என குற்றச்சாட்டு கூறப்படுகிறதே.

ப : எந்த நடவடிக்கை அப்படி உள்ளது?

கே : உயர்கல்வி ஆணையத்தை (யு.ஜி.சி) மத்திய அரசு மாற்றி அமைப்பதாக கூறப்படுகிறது.

ப : எப்போதும் காலம் காலமாக பயன்படுத்தப்படுகின்ற ஒருமுறையை மாற்றி அமைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும் என்றால் அதை மாற்றி பயன்படுத்துவது நல்லது. அதை செய்யாவிட்டால் மக்களுக்கு செய்யும் துரோகம். மத்திய அரசு அந்தந்த மாநில மக்கள் பயன் பெறும் வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.

கே : தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது என அமித்ஷா குற்றச்சாட்டியுள்ளாரே?

ப : அவர் அ.தி.மு.க. அரசை மட்டும் குறை சொல்லவில்லை. இதில் ஒரு கட்சியை மட்டும் தனிமைப்படுத்தாதீர்கள். அவர் தெளிவாக பேசியுள்ளார். தமிழகத்தில் ஊழலற்ற நேர்மையான, வெளிப்படையான ஆட்சி வேண்டும் என்பதை தான் அவர் கூறியுள்ளார்.

கே : ஊழலை ஒழிப்பதாக கூறி வரும் பா.ஜனதா அரசு கடந்த 3 ஆண்டுகளில் யாரை கைது செய்துள்ளது என தம்பிதுரை எம்.பி. கேள்வி எழுப்பியுள்ளாரே?


ப : இந்த கேள்விக்கு வெளிப்படையாக பதில் அளிக்க முடியாது. யாரையும் உள்நோக்கத்தோடு கைது செய்ய முடியாது. ஊழல் நிரூபிக்கப்பட்டால் அவர்களை கைது செய்யும் போது அவர்கள் தப்பிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

கே : 2019-ல் நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தல் வரும் என்று கூறப்படுவது பற்றி?

ப : நாடு முழுவதும் ஒரே தேர்தல் என்பதை மக்கள் வரவேற்கிறார்கள். ஏன் என்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு தேர்தல் நடந்து கொண்டே இருக்கிறது. இதை மக்கள் விரும்பவில்லை.

ஒரே நேரத்தில் தேர்தல் வருவதை மக்கள் விரும்புகிறார்கள். இதை கண்டு பயப்படுகிறவர்களுக்கு அது அவர்களது சொந்த பயத்தை காட்டுகிறது.

கே : பா.ஜனதா நிலை என்ன?

ப : வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிகபடியான இடங்களில் பா.ஜனதா வெற்றி பெறும். சட்டமன்ற தேர்தலிலும் ஆளுமையை நிரூபிக்கும். எந்த தேர்தல் எப்போது வந்தாலும் எதிர்கொள்ள பா.ஜனதா தயாராக இருக்கிறது.

கே : வரும் தேர்தலில் பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்று பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் கூறியிருப்பது பற்றி பதில் என்ன?

ப : தேர்தலுக்கு முன்பு யார் வேண்டுமானாலும் எதையும் கூறலாம். தேர்தல் வரும் போது தான் எதை தின்றால் பித்தம் தெளியும் என்றும் கிடைக்கிறதெல்லாம் கிடைக்காதா? என்று அனைத்து அரசியல் கட்சிகளும் நினைப்பார்கள்.

தேர்தலின் போது இது மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது மாவட்ட தலைவர் தங்க ராஜைய்யன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர். #BJP #PonRadhakrishnan #AssemblyElection
Tags:    

Similar News