செய்திகள்

நீட் தேர்வு குளறுபடியால் மாணவர்கள் பாதிக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்- தமிழிசை

Published On 2018-07-11 13:11 IST   |   Update On 2018-07-11 13:11:00 IST
நீட் தேர்வு தொடர்பான குளறுபடிகளால் மாணவர்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தமிழிசை சவுந்தரராஜன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

பா.ஜனதா கட்சி அத்தனை மொழிகளையும் மதிக்கின்ற கட்சி. மத்திய அரசு நீட் தேர்வை தமிழ் மொழியில் எழுத அனுமதித்திருப்பது பாராட்டுக்குரியது. ஆனால் சில அதிகாரிகளால் தவறு நடந்திருக்கிறது.

எந்த விதத்திலும் அதிகாரிகளின் தவறினால் மாணவர்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது. எனவே மாணவர்கள் பாதிக்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நான் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தை தொடர்பு கொண்டு மாணவர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்று கோரிக்கை வைத்தேன். கோர்ட்டு உத்தரவு இன்னும் கையில் வரவில்லை. வந்ததும் தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என்று சொல்லி இருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை மாணவர்கள் பாதிப்பு அடையாமல் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.


கனிமொழியின் பேச்சுக்கு நான் எனது கண்டனத்தை வன்மையாக தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜனதா ஒரு தேசியக் கட்சி. மரியாதைக்குரிய தலைவர்கள் இருக்கிற கட்சி. அவர்களை கேலிக்கூத்தாக்குவது இவர்கள் போடுகின்ற மீம்ஸ்தான்.

தி.மு.க.வினர் மற்ற கட்சிகளை எதிர்த்து இணைய தளத்தில் பதிவு செய்பவர்களுக்கு எப்படி அனுசரணையாக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று ஒரு பத்திரிகையில் செய்தி வெளியாகி இருக்கிறது. மற்ற கட்சி தலைவர்களை கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாக்குகிறார்கள்.

ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக பா.ஜனதா தலைவர்கள் யாரும் சிறை சென்றது கிடையாது. இதில் கேலி-கிண்டல் செய்ய என்ன இருக்கிறது?

தொண்டர்கள், நிர்வாகிகள் 15 ஆயிரம் பேர் கூடி மிகப்பெரிய மாநாட்டை நடத்திக் காட்டி இருக்கிறோம். எனவே மற்ற தலைவர்களை அனைவரும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மற்ற கட்சிகளின் நடவடிக்கையை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும்.

தமிழகத்துக்கு வரும் ஒரு தலைவரை போங்க என்கிறார்கள். இது விருந்தோம்பல் ஆகுமா? நாங்கள் அப்படிப்பட்ட தரம் தாழ்ந்த அரசியலில் ஈடுபட மாட்டோம்.

தமிழகத்தில் ஊழல் நிறைந்திருக்கிறது என்று அமித்ஷா சொன்னதை திருநாவுக்கரசர் போன்றவர்கள் வேறு மாதிரி திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை நேர்மையான நிர்வாகம் தமிழகத்தில் வரவேண்டும். 50 வருடமாக தமிழகத்தில் நேர்மையான நிர்வாகம் இல்லை என்பதுதான் நமக்கு கவலையாக இருக்கிறது.

பிப்ரவரி 16-ந்தேதி எனது சுற்றுப்பயணத்தை தொடங்கி விட்டேன். அந்த சுற்றுப்பயணத்தில் நான் சந்தித்தவர்கள்தான் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்துக்கு வந்தார்கள். தேர்தல் வேலையை நாங்கள் ஆரம்பித்து விட்டோம்.

இவ்வாறு அவர் கூறினார். #BJP #TamilisaiSoundararajan
Tags:    

Similar News