செய்திகள்
நாமக்கல்லில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக கொடியை டிடிவிதினகரன் ஏற்றி வைத்த காட்சி

18 எம்.எல்.ஏ.க்கள் நீதிமன்றம் மூலம் வென்று மீண்டும் சட்டசபைக்கு வருவார்கள்- தினகரன்

Published On 2018-07-05 12:13 IST   |   Update On 2018-07-05 12:13:00 IST
18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றம் மூலம் வென்று மீண்டும் சட்டசபைக்கு வருவார்கள் என்று நாமக்கலில் டி.டி.வி. தினகரன் கூறினார். #TTVDhinakaran #18MLACase
நாமக்கல்:

நாமக்கல்லில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு முழுவதும் இன்று ஒருவருடைய நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடக்கிறது. உங்கள் கருத்து என்ன?

அரசுக்கு முட்டை எல்லாம் சப்ளை செய்கிறார்கள். அதுமட்டுமல்ல சத்துணவு துறைக்கு நிறைய பொருள் சப்ளை செய்கிறார்கள். அவர்களது நிறுவனம் மற்றும் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடப்பதை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

உங்களுக்கே தெரியும். அது திருச்செங்கோடு, நாமக்கல் போன்ற பகுதிகளில் அதிக இடங்களில் சோதனை நடக்கிறது. இதற்கு பின்னணியில் யார் இருக்கிறார்? யார்? யாரை நோக்கி இது குறி வைத்து இருக்கிறார்கள் என்பது நாமக்கல் மாவட்ட மக்களுக்கு குறிப்பாக குமாரபாளையம் பகுதி மக்களுக்கு நன்றாக தெரியும்.

2006-ல் சட்டமன்ற உறுப்பினராக ஆனவர்கள் அன்றைக்கு சொத்து மதிப்பு எவ்வளவு என்பதை கொடுத்து இருப்பார்கள். இன்றைக்கு அவர்களது சொத்து மதிப்பு என்ன? தமிழ்நாடு மட்டுமல்ல, வெளி மாநிலங்களிலும் ஆக்டோபஸ் மாதிரி அவர்களுடைய பினாமி பெயரில் பரவி இருக்கிறதாக வந்த தகவலின் அடிப்படையில் தான் இந்த சோதனை நடைபெறுவதாக சொல்கிறார்கள்.

பார்ப்போம்.. பொறுத்து இருந்து பார்ப்போம்... இன்னும் இதைபோல் நிறைய வேடிக்கைள் எல்லாம் நடக்கும் என தகவல்கள் வருகிறது.

கடந்த 2 வருடங்களாக தமிழ்நாட்டை பலர் சுரண்டி உள்ளார்கள். சுரண்டியவர்களிடம் சோதனை நடப்பதாக தகவல் வந்து இருக்கிறது.

இந்த சோதனை மத்திய அரசின் அழுத்தமா?

யாருடைய அழுத்தமும் இல்லை. நிறைய பேருடைய பினாமிகளை நோக்கி இந்த சோதனை நடப்பதாக சொல்கிறார்கள். சோதனை முடிந்ததும் என்ன வெளி வருகிறது என்று பார்ப்போம்.

தமிழ்நாட்டில் இரண்டு பக்கமும் நிறைய கொள்ளையடித்தவர்கள் யார்? யார்? என்று உங்களுக்கே தெரியும். அவர்களுடைய பினாமி என்று சொல்கிறேன்.

பாராளுமன்ற தேர்தல் கூடிய விரைவில் வர உள்ளதே?

2019-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வரும். அதற்குள் இந்த சட்டமன்ற தேர்தல் வரவேண்டும் என்பதே தமிழ்நாட்டு மக்களுடைய எதிர்ப்பார்ப்பு.

இந்த மக்கள் விரோத ஆட்சி விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பது தான் மக்களுடைய எதிர்ப்பார்ப்பு. மீண்டும் அம்மா அவர்களின் ஆட்சி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தலைமையில் வந்தால் தான் ஏழை, எளிய மக்கள், விவசாய பெருங்குடிமக்கள், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் போன்ற சமுதாயத்தின் பல்வேறு பிரிவினர் பயன்பெறுவார்கள்.


பா.ஜ.க. தலைவர் அமித்ஷா 9-ந்தேதி தமிழகம் வருகிறார். இதனால் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?

அதுபற்றி எனக்கு தெரியாது.

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு குறித்து எப்படி பார்க்கிறீர்கள்?

18 எம்.எல்.ஏ.க்கள் வழக்கு நிச்சயம் நீதிமன்றத்தின் மூலம் வென்று மீண்டும் சட்டமன்றத்திற்கு வருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran #18MLACase
Tags:    

Similar News