செய்திகள்

மாநில சுயாட்சிக்காக ஆயுள் முழுக்க சிறை செல்ல தயார் - மு.க.ஸ்டாலின்

Published On 2018-07-01 11:44 IST   |   Update On 2018-07-01 17:44:00 IST
மாநில சுயாட்சி பறிபோகிறது என்றால் ஆயுள் முழுக்க சிறையில் இருக்கவும் தயார் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். #MKStalin #DMK

கரூர்:

தி.மு.க. மாநில மற்றும் மாவட்ட மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் கரூரில் நடந்தது. தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.க.வை பொறுத்தவரை எந்த தத்துவத்தில் கட்சி ஆரம்பிக்கப்பட்டதோ, அதில் இருந்து இம்மியும் விலகி விடாமல் செயல்பட்டு வருகிறது. அண்ணாவுக்கு பிறகு தலைவர் கருணாநிதி இதனை சிறப்பாக வழிநடத்தி வருகிறார். கொங்கு மண்டலத்தில் அதிக அளவு வெற்றி பெற்றிருந்தால் நாம் இன்றைக்கு ஆட்சியில் இருந்திருப்போம்.

கட்சியில் கொங்கு மண்டல களையெடுப்பு நடந்து முடிந்துள்ளது. நாளை அல்லது மறுநாள் தென் மண்டல களையெடுப்பு வெளியாகும். இது என் விருப்பத்திற்காக அல்ல, கட்சியின் நன்மைக்காக.

மாணவரணியின் ஒருங்கிணைப்பு உள்ளிட்டவற்றினால் தான் 1967-ல் காங்கிரசை வீட்டுக்கு அனுப்ப முடிந்தது. தி.மு.க. படிப்படியாகத்தான் தேர்தலில் நின்று வெற்றிபெற்றது. கட்சி தொடங்கியதும் தேர்தலில் போட்டியிடவில்லை.

நாட்டில் புதிது, புதிதாக கட்சிகள் வரலாம். கட்சி தொடங்குவதற்கு முன்பே நான்தான் முதல்வர் என்று சொல்லிக்கொள்கிறார்கள். பூத் ஏஜெண்டுகளை நியமிக்கிறார்கள். கட்சி தொடங்கியதும் தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரமும் பெறுகிறார்கள். கட்சி பெயர், கொள்கையையே அறிவிக்காமல் நான்தான் அடுத்த முதல்வர் என்றும் கூறுகிறார்கள். அது அவர்கள் ஆசை, அதைப் பற்றி விமர்சிக்க தேவையில்லை. அதைப்பற்றி விமர்சித்து நம் தகுதியை குறைத்துக்கொள்ள கூடாது. யாரையும் கேலி செய்தோ, தரக்குறைவாகவோ பேசியது கிடையாது.

கர்நாடகாவில் 38 எம்.எல். ஏ.க்களை வைத்துக்கொண்டு குமாரசாமி தற்போது முதல்வராக உள்ளார். நாம் 89 எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்தும் முதல்வராக இல்லை. நீங்கள் நினைத்தால் முடித்திருக்கலாமே என கூறுகிறார்கள். கலைஞர் இருந்தால் விட்டிருப்பதாரா? ஸ்டாலின் ரொம்ப பொறுமை என்கிறார்கள்.

எம்.எல்.ஏ.க்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கவனித்து ஆட்சி நடக்கிறது. அவர்களை நம்மால் இழுக்க முடியும். அவர்களை விட நாம் அதிகம் கொடுக்க வேண்டி இருக்கும். தலைவர் கருணாநிதி எப்போதாவது ஆட்சியை கவிழ்த்திருக்கிறார் என்பதை ஆதாரத்துடன் நிரூபித்தால் இந்த ஆட்சியை நாளைக்கே கவிழ்க்க தயார். ஆனால் பல முறை தி.மு.க. ஆட்சிதான் கலைக் கப்பட்டிருக்கிறது. இதுதான் வரலாறு.

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். மத்திய அரசின் அனுமதி இல்லாமல் துப்பாக்கி சூடு நடந்திருக்க வாய்ப்பு இல்லை என அகில இந்திய தலைவர் ஒருவர் சொல்லி இருக்கிறார். இறந்ததற்கு மோடி ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை. குஜராத்தில் நடந்திருந்தால் இவ்வாறு இருப்பார்களா?

கவர்னர் ஆய்வு செய்வது தவறு என அவரிடம் நேரடியாக சொன்னதால் தான் நாமக்கல் மாவட்டத்தில் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். போராட்டம் நடத்தினால் 7 ஆண்டுகள் ஜெயில் என ஆளுநர் மாளிகை அறிவிக்கிறது. மாநில சுயாட்சி பறிபோகிறது என்றால் ஆயுள் முழுக்க சிறையில் இருக்கவும் தயார். அடுத்த ஆய்வுக்கு கவர்னர் செல்லும்போது, நானே கருப்புக்கொடி காட்ட செல்வேன்.

இவ்வாறு அவர் கூறினார். #MKStalin #DMK

Tags:    

Similar News