செய்திகள்

வெளிமாநிலத்தவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சேர முடியாது- மு.க.ஸ்டாலினுக்கு, விஜயபாஸ்கர் பதில்

Published On 2018-06-29 03:32 GMT   |   Update On 2018-06-29 03:32 GMT
வெளிமாநில மாணவர்கள் தமிழக மருத்துவ ஒதுக்கீட்டில் சேர முடியாத அளவுக்கு விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது என்று மு.க.ஸ்டாலினுக்கு, டாக்டர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். #MKStalin #VijayaBhaskar #TNAssembly
சென்னை:

சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வு அடிப்படையிலான மருத்துவ சேர்க்கை தொடர்பாக கவன ஈர்ப்பை கொண்டு வந்து பேசியதாவது:-

ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்ற மாநிலங்களைச் சார்ந்திருக்கக்கூடிய மாணவர்கள் தமிழ்நாட்டில் இருப்பதாக இருப்பிட சான்றிதழ் பெற்றுக்கொண்டு இப்பொழுது மருத்துவக் கல்லூரியில் சேரக்கூடிய ஒரு சூழ்நிலை வந்திருக்கிறது என மிகப்பெரிய குற்றச்சாட்டு தொடர்ந்து உலவிக்கொண்டு இருக்கிறது.

எனவே, இருப்பிடச் சான்றிதழ் விவகாரத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற மோசடிகளைப் போல, இந்த ஆண்டும் நடைபெறாமல் இருப்பதை தவிர்க்க இந்த ஆண்டு ஒரு புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருந்தாலும், மற்ற மாநிலத்தவர் எப்படியோ யாருடைய துணையோடோ ஏதோ சதி செய்து இங்கு வந்து சேர்ந்து விடுகிறார்கள்.

இந்த நிலையில், நீட் தேர்வுக்கு எதிராக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களின் நிலை என்னவாயிற்று?. அதன் தற்போதைய நிலை என்ன? என்பதை முதல்-அமைச்சர் விளக்க வேண்டும். ஒருவேளை மத்திய அரசு அந்த மசோதாவை வேண்டுமென்றே விதிமுறைகளின் படி எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பிலே போட்டு வைக்கப்பட்டிருக்கும் என்று சொன்னால், அந்த மசோதாக்களுக்கு ஜனாதிபதி அனுமதிபெறவும், உடனடியாக மத்திய அரசுக்கு உத்தரவிடவும் தமிழக அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக ஒரு வழக்கு தொடர வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்புக்கு பதில் அளித்து அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் கூறியதாவது:-

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் அதிக மருத்துவ இடங்களாக 3,393 இடங்கள் உள்ளது. நமது மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் மட்டும் சேரும் வகையில் விதிமுறைகளை கடுமையாக்கியிருக்கிறோம். மாநில ஒதுக்கீட்டில் ஒரு இடத்தை கூட பிற மாநில மாணவர்கள் பெற முடியாது. தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டும் தான் விண்ணப்பிக்க முடியும். இதில் தமிழக அரசு தெளிவாக இருக்கிறது. தேசிய ஒதுக்கீட்டில் 15 சதவீதம் போக 85 சதவீதம் நமக்கு தான்.



இருப்பிட சான்று தொடர்பான வழக்கு கோர்ட்டில் இருக்கிறது. வெளிமாநிலத்து மாணவர்கள் தமிழகத்தில் இருப்பிட சான்று பெற்று சேருவதை தடுக்க மிக தெளிவாக 12 ஷரத்துக்களை சேர்த்து இருக்கிறோம். எனவே அவர்கள் விண்ணப்பிக்கும்போதே நிராகரிக்கப்பட்டு விடுவார்கள். நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஜனாதிபதி நிறுத்தி வைத்து இருக்கிறார். இதற்கான காரணத்தையும் நாங்கள் கேட்டு இருக்கிறோம். கடந்த முறை உச்ச நீதிமன்ற தீர்ப்பு காரணமாக நீட் தேர்வு நடைபெற்றது. இருப்பினும் இந்த அரசு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர் பதில் அளித்தார். #MKStalin #VijayaBhaskar #TNAssembly
Tags:    

Similar News