செய்திகள்

18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எடப்பாடி ஆட்சி அதிக நாள் நீடிக்காது - பாலகிருஷ்ணன்

Published On 2018-06-15 05:17 GMT   |   Update On 2018-06-15 05:20 GMT
18 எம்.எல்.ஏக்கள் தீர்ப்பு எப்படி இருந்தாலும் எடப்பாடி ஆட்சி அதிக நாள் நீடிக்காது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். #EdappadiPalaniswami #MLAsDisqualified

பூதலூர்:

போராடுவோம் தமிழகமே என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் பிரசார பயணம் கடந்த 8-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர், செங்கிப்பட்டியில் பிரசார பயணம் நடைபெற்றது. இந்த பிரசார பயணத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். பேசும் போது கூறியதாவது:-

காவிரி பிரச்சினையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தின் உரிமைகளை போராடி பெற வேண்டிய தமிழக அரசு மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறது. மக்கள் தமக்குள்ள உரிமைகளை பெற போராடிஆக வேண்டும். போராடாமல் தீர்வு கிடைக்காது.

 


18 எம்.எல்.ஏக்கள் குறித்து தீர்ப்பு எப்படி இருந்தாலும் எடப்பாடி ஆட்சி அதிக நாள் நீடிக்காது. மத்தியில் ஆளும் மோடியும், மாநிலத்தில் மோடியின் எடுபிடியாக உள்ள எடப்பாடி ஆட்சியும் நீடிக்க வாய்ப்பு இல்லை. இந்த பிரசார பயணம் மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு எச்சரிக்கை மணி. இந்த பிரசார பயணம் நிறைவு பெறும் போது மாற்றம் நிகழும்.

தஞ்சை மாவட்டம் பயன்பெற குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டிருக்க வேண்டும். தண்ணீர் திறக்கப்படவில்லை. விவசாயிகள் விவசாய தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. விவசாயிகள் சலுகை கேட்டால் சாக்கு போக்கு சொல்லும் மத்திய,மாநில அரசுகள் கார்பரேட் கம்பெனி முதலாளிகளான அதானி. அம்பானி ஆகியோருக்கு சலுகைகளை அள்ளி வழங்கி கொண்டிருக்கின்றன.

தமிழகத்தில் குட்கா வழக்கை சிபிஐ விவசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதலமைச்சர் எடப்பாடி மீது வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிடும் காலம் விரைவில் வரும்.

இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalaniswami #MLAsDisqualified

Tags:    

Similar News