செய்திகள்

நாளை முதல் சட்டசபைக்கு 10 நாட்கள் விடுமுறை

Published On 2018-06-14 08:42 GMT   |   Update On 2018-06-14 08:42 GMT
ரம்ஜான் பண்டிகையையொட்டி, சட்டசபைக்கு நாளை விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது. இதை தொடர்ந்து 10 நாட்கள் சட்டசபை கூட்டத்துக்கு விடுமுறை விடப்படுகிறது.#TNAssembly
சென்னை:

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த மே மாதம் 29-ந்தேதி தொடங்கியது.

இதுவரை வனம், சுற்றுச்சூழல் துறை தொடர்பான விவாதம் முதல்நாள் நடந்தது. இதையடுத்து பள்ளிக்கல்வி, உயர்கல்வி, மின்சாரம், மதுவிலக்கு, மீன், பால்வளம், கால்நடை, நகராட்சி, உள்ளாட்சி, சட்டம், சிறை, நீதி நிர்வாகம், சத்துணவு, மாற்றுத்திறனாளி, தொழில் துறை, சிறு-குறு தொழில், கைத்தறி, கதர் கிராம தொழில், நெடுஞ்சாலை, பொதுப்பணி, அறநிலையத்துறை மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டு அதற்கான விவாதங்கள் நடந்துள்ளன.

எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதுதவிர ஸ்டெர்லைட், காவிரி பிரச்சனை, எஸ்.வி.சேகர் விவகாரம் உள்பட பல்வேறு பிரச்சனைகளும் சட்டசபையில் எழுப்பப்பட்டு காரசார விவாதங்கள் நடந்தன. எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.

இன்று 13-வது நாளாக சட்டசபை கூட்டம் நடந்தது. இதில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதற்கான விவாதத்தில் ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.


உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் விஜய பாஸ்கர் பதில் அளித்து பேசினார். புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். எதிர்க்கட்சி உறுப்பினர்களின் காரசார விவாதங்களும் இடம்பெற்றன.

ரம்ஜான் பண்டிகையையொட்டி, சட்டசபைக்கு நாளை (வெள்ளிக்கிழமை) விடுமுறை விடப்படுகிறது. தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருகிறது.

இதையடுத்து, வருகிற 24-ந்தேதி வரை தமிழக சட்டசபை கூட்டம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தொடர்ந்து 10 நாட்கள் சட்டசபை கூட்டத்துக்கு விடுமுறை விடப்படுகிறது.

மீண்டும் சட்டசபை 25-ந்தேதி கூடுகிறது. இதில் தொடர்ந்து செய்தி, சுற்றுலா, காவல்துறை, தீயணைப்பு, வருவாய் துறை, சுற்றுசூழல், வணிகவரி, போக்குவரத்து, ஆதிதிராவிடர், தமிழ் வளர்ச்சி, பொதுத்துறை, சட்டமன்றம் உள்ளிட்ட மற்ற துறைகளுக்கான மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெறுகின்றன.

இந்த துறைகள் சார்பாக பல்வேறு புதிய அறிவிப்புகளும் வெளியாக உள்ளன. வருகிற ஜூலை 9-ந்தேதி இந்த சட்டமன்ற கூட்டத்தொடர் நிறைவுபெறுகிறது. #TNAssembly
Tags:    

Similar News