செய்திகள்

அதிமுகவை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் கிடையாது: அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி

Published On 2018-06-10 15:49 IST   |   Update On 2018-06-10 15:49:00 IST
அ.தி.முக.வை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் கிடையாது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். #admk #ministersellurraju

மதுரை:

மதுரை மாநகர் மாவட்ட அ.தி.முக. இளைஞர்-இளம் பெண்கள் பாசறை சார்பில் மதுரை மாநகர் பகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகள் வாரியாக புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இன்று மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட் பட்ட ஜெய்ஹிந்துபுரத்தில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. முகாமுக்கு பாசறை செயலாளர் அரவிந்தன் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு புதிய உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து பேசினார். பின்னர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மதுரை மாநகர் மாவட்டத்தில் அ.தி.மு.க. இளைஞர்- இளம்பெண்கள் பாசறை சார்பில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இன்றைக்கு இளைஞர்களுக்கு எதிர்காலம் நம்பிக்கை எல்லாம் அ.தி. மு.கவில் மட்டுமே உள்ளது. இதனை உணர்ந்துள்ள இளைஞர்கள் திரளாக அ.தி.மு.க.வில் புதிய உறுப்பினர்களாக சேர்ந்து வருகிறார்கள்.

1½ கோடி தொண்டர்களுடன் வலுவான இயக்கமாக அ.தி.மு.க. திகழ்ந்து வருகிறது. அ.தி.மு.க. இயக்கம் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித்தலைவி அம்மாவால் உருவாக்கப்பட்டு வளர்க்கப்பட்ட இயக்கம். இந்த இயக்கத்தை யாராலும் அசைத்துக்கூட பார்க்க முடியாது.

திவாகரன் இன்றைக்கு ஒரு புதிய கட்சி தொடங்கி இருக்கிறார். ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அதனை மக்கள் ஏற்க மாட்டார்கள். எனவே புதிய கட்சியால் அ.தி.மு.க.வுக்கு எந்த பாதிப்பும் இல்லை. அ.தி.மு.க.வை எதிர்க்கும் வல்லமை யாருக்கும் கிடையாது. சிலர் கட்சி தொடங்கியதால் அ.தி.மு.க.வுக்கு கடுகளவு கூட இழப்பு இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். #admk #ministersellurraju

Tags:    

Similar News