செய்திகள்

ரஜினிகாந்தின் பிம்பத்தை சிதைக்கும் முயற்சிக்கு கமல்ஹாசன் ஆதரவு - தமிழருவி மணியன் குற்றச்சாட்டு

Published On 2018-06-05 03:31 GMT   |   Update On 2018-06-05 03:31 GMT
ரஜினிகாந்துக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்க பார்க்கிறார் என்று தமிழருவி மணியன் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:

காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ரஜினிகாந்த் மக்கள் போராட்டத்துக்கு எதிரானவர் என்பதை போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவதில் கமல்ஹாசன் ஈடுபட்டிருப்பதை அவருடைய கருத்து தெளிவாகவே வெளிப்படுத்துகிறது. மாபெரும் மக்கள் சக்தியாக வளர்ந்து வரும் ரஜினிகாந்தின் அரசியல் வருகையால் தங்களுடைய முதல்-அமைச்சர் கனவு கலைந்துவிடக்கூடும் என்று அச்சத்தில் ஆழ்ந்திருக்கும் தலைவர்களும், சில அமைப்புகளும் அவருடைய பிம்பத்தை திட்டமிட்டு சிதைக்க முற்படும் நேரத்தில் கமல்ஹாசனும் மறைமுகமாக அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதன் அந்தரங்க நோக்கத்தை மக்கள் எளிதாக இனம் காணக்கூடும்.

ரஜினிகாந்த் மக்கள் நலன் சார்ந்த எந்த போராட்டத்துக்கும் எதிரி அல்ல. மக்களால் வளர்த்தெடுக்கப்படும் வாழ்வாதார போராட்டங்களில் வன்முறையாளர்கள் இடம் பெற்றிடலாகாது என்பதுதான் ரஜினியின் கவலையாக இருக்கிறது. ரஜினிகாந்த் சொந்த கருத்தை சொல்லி இருப்பதாகவும், மக்கள் கருத்தையே தான் எப்போதும் முன்வைப்பதாகவும் கமல்ஹாசன் கூறியிருப்பதில் அவருடைய அந்தரங்க நோக்கம் தெளிவாகவே முகம் காட்டுகிறது. சொந்த கருத்தை வெளிப்படுத்தும் துணிவுதான் ஓர் உயர்ந்த தலைமைக்குரிய நல்ல அடையாளம்.

ஆனால் எந்த ஆதாயத்திற்காகவும் ரஜினிகாந்த் தன் சொந்த கருத்தை மறைத்து மக்கள் கருத்து என்ற போர்வையில் பதுங்குபவர் இல்லை. ரஜினிகாந்துக்கு எதிராக வன்மத்துடன் உருவாக்கப்படும் எதிரலையை தனக்கு சாதகமாக பயன்படுத்தி குழம்பிய குட்டையில் கமல்ஹாசன் மீன் பிடிக்க பார்ப்பது வருந்தத்தக்கது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
Tags:    

Similar News