செய்திகள்

1-ம் வகுப்பு மாணவர்களுக்கு கியூ ஆர் திட்டம் மூலம் பாடங்கள் கற்பிக்கப்படும்: அமைச்சர் செங்கோட்டையன்

Published On 2018-06-02 06:31 GMT   |   Update On 2018-06-02 06:31 GMT
1-ம் வகுப்பு மாணவர்களுக்கு கியூ ஆர் திட்டம் மூலம் பாடங்கள் கற்று கொடுக்கப்படும் என்று பள்ளிகல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
கோபி:

கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம் அரசு உயர் நிலைப்பள்ளியில் 25-வது ஆண்டு வெள்ளி விழாவையொட்டி கட்டப்பட்டுள்ள கலையரங்கம் திறப்பு விழா இன்று நடந்தது. கலெக்டர் பிரபாகர் தலைமை தாங்கினார்.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால முரளி வரவேற்றார். கலையரங்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்து பேசியதாவது:-

1-ம் வகுப்பு மாணவர்களுக்கு கியூ ஆர் திட்டம் மூலம் பாடங்கள் கற்று கொடுக்கப்படும். இந்த கோடு மூலமாக செல்போனில் பாடத்தை தெரிந்து கொள்ளலாம். 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அனைவருக்கும் இலவச கல்வி கற்றுத்தர இந்த அரசு முனைப்புடன் செயல்பட உள்ளது. புதிய சீருடைகள் மாற்றி அமைத்ததன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் தாழ்வு மானப்பான்மை இல்லாமல் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது.

1,6,9,11 ஆகிய வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் இந்த ஆண்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 8 மாதத்துக்கும் மேலாக கல்வியாளர்கள் உழைத்து இந்த புதிய புத்தகங்களை உருவாக்கி உள்ளனர். இந்த புத்தகம் சி.பி.எஸ்.இ.க்கு இணையாக இருப்பதாக அனைவரும் பாராட்டுகிறார்கள். இந்தியாவையே திரும்பி பார்க்கும் அளவுக்கு தமிழக கல்வி துறை மாறும் என்பதில் ஐயமில்லை. நாம் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும் என்ற நிலையை இந்த அரசு உருவாக்கி உள்ளது. இந்தியாவிலேயே எவரும் பெற முடியாத மடி கணினி திட்டத்தையும், இலவச சைக்கிள் வழங்கும் அறிமுகப்படுத்தியது ஜெயலலிதா தான். அவரது ஆசியோடு இந்த அரசு நடக்கிறது.

1,6,9,11-ம் வகுப்பு தவிர மற்ற வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு வரும் ஆண்டுகளில் புதிய பாடத்திட்டங்கள் மாற்றி அமைக்கப்படும். ஆசிரியர்களின் உழைப்பால்தான் மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க முடியும். எல்லா பெற்றோருக்கும் தனது மகன், மகள் தனியார் பள்ளிகளை போல ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற ஆசை உள்ளது. அவர்களது கனவை நனவாக்க தமிழகத்தில் கல்வி துறையில் பெரும் மாற்றம் ஏற்படுத்தப்படும். தனியார் பள்ளிகளில் தனது மகன், மகளை சேர்த்து பின்னர் பணம் கட்ட முடியாமல் மீண்டும் அரசு பள்ளிகளுக்கு வந்து சேர்க்கும் நிலையானது உருவாகும்.


நீட் தேர்வு தமிழகத்தில் இருக்கக்கூடாது என்ற எங்களது முடிவில் மாற்றம் இல்லை. மத்திய அரசுக்கு இது தொடர்பாக அழுத்தம் கொடுத்து வருகிறோம். நீட் தேர்வுக்காக 3486 மாணவ- மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் ஆயிரம் பேர் மருத்துவர்களாகும் வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறும் போது, ‘‘கட்டாய கல்வி சட்டத்தில் தனியார் பள்ளிகளில் தரப்படும் கல்வியை தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை. கட்டாய கல்வி சட்டத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து சட்டப்பேரவையில் விளக்கப்படும்’’ என்று கூறினார். #TNMinister #Sengottaiyan
Tags:    

Similar News